Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்ராறியோவில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட 4 வயது குழந்தை ஒன்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் 40 மணி நேரம் காத்திருக்க நேர்ந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் முற்றிலும் அபத்தமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அந்த குழந்தையின் தாயார் தெரிவித்துள்ளார். நவம்பர் 9ம் திகதி நள்ளிரவு நேரம் தமது குழந்தையின் நிலை கண்டு 911 இலக்கத்திற்கு தொடர்புகொண்டுள்ளார் தாயார் ஜாஸ்மின்.

இதனையடுத்து, அவர்கள் இருவரும் Cortellucci Vaughan மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மருத்துவமனைக்கு சென்ற ஒருமணி நேரத்தில் மருத்துவர் ஒருவரையும் ஜாஸ்மின் சந்தித்துள்ளார்.

ஆனால் அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் உரிய நேரத்தில் முடிக்கப்படவில்லை என ஜாஸ்மின் குற்றஞ்சாட்டியுள்ளார். மருத்துவர் கூறியதையடுத்து, இரவு தங்கவும் முடிவு செய்துள்ளனர்.

பகல் 8 மணிக்கு பரிசோதனை பகுதியில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர். அங்கே அவர்கள் சுமார் 5 மணி நேரம் படுக்கை ஒதுக்கப்படாமல் காத்திருக்க நேர்ந்துள்ளது. இதனிடையே, தமது மகளின் ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிட்டது என கூறும் ஜாஸ்மின், அப்போது செவிலியர்கள் உதவியதாகவும், நவம்பர் 10ம் திகதி மதியத்திற்கு மேல் 6 மணியளவில் தங்களுக்கு படுக்கை ஒதுக்கியதாகவும் ஜாஸ்மின் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, 911 இலக்கத்திற்கு தொடர்புகொண்டு சுமார் 40 மணி நேரத்திற்கு பின்னர், Cortellucci Vaughan மருத்துவமனையில் தமது மகளுக்கு படுக்கை ஒன்று ஒதுக்கப்பட்டது என்றார் ஜாஸ்மின்.

ஒருகட்டத்தில் குழந்தைகளுக்கான இன்னொரு மருத்துவமனைக்கு தங்களை அனுப்பி வைக்க கோரியதாகவும், ஆனால் அங்கே படுக்கைகள் எதும் காலியாக இல்லை என பதிலளித்துள்ளதாகவும் ஜாஸ்மின் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், ஒன்ராறியோவில் மொத்தம் 112 அவசர சிகிச்சை படுக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் கடந்த பல நாட்களாக எண்ணிக்கை அதிகமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.