கனடாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து அதிகரித்தது.
ஒமிக்ரோன் தொற்று நோயை கட்டுப்படுத்தி மற்றொரு அலையைத் தவிர்க்க கனடா போராடி வரும் நிலையில் இறப்புக்கள் 30,000 என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.
கடந்த 2020 நவம்பரில் 10,000 கொவிட் இறப்புகளை கனடா எட்டியது. தொற்று நோய் தொடங்கி 9 மாதங்களில் 10,000 மரணங்கள் பதிவாயின.
ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஜனவரி 2021 இல் இறப்பு எண்ணிக்கை 20,000 ஆக இரட்டிப்பாகியது.
தொடர்ந்து மே மாதத்தில் நாடு 25,000 கொவிட்-19 இறப்புகளை தாண்டியது.
எனினும் அதன் பின்னர் தடுப்பூசிகள் தினசரி வைரஸால் இறப்பவர்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கனடாவில் முதல் கொவிட் தடுப்பூசி 2020 டிசம்பரில் போடப்பட்டது. அதன் பின்னர் தடுப்பூசி பணிகள் வேகமெடுத்த நிலையில் இறப்புக்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் குறைந்தது என கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் தெரிவித்தார்.
தடுப்பூசிகள் கனடாவில் இதுவரை 476,000 க்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் என மதிப்பிடுவதாக ரொரன்டோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் டாக்டர் தாரா மோரியார்டி தெரிவித்துள்ளார்.
கனடாவின் மொத்த கொவிட்-19 இறப்புகளில் சுமார் 40 வீதம் கடந்த ஜனவரி மாதத்திற்கு பின்னர் நிகழ்ந்துள்ளன.
2021 இல் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் எனவும் டாக்டர் தாரா மோரியார்டி குறிப்பிட்டார்.