Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோவில் குடியிருப்புகளை ஆண்டின் ஆறு மாதங்களுக்கு மேல் காலியாக வைத்திருந்தால் வரி செலுத்த வேண்டும் என்ற விதி இந்த ஆண்டு முதல் அமுலுக்கு வருகிறது.

இதனால், பிப்ரவரி 2ம் திகதி வரையில், உரிமையாளர்கள் தங்கள் குடியிருப்புகளை காலியாக வைத்திருக்கலாமா என்பது தொடர்பில் முடிவெடுக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புகளை காலியாக வைத்திருக்க முடிவு செய்துள்ள உரிமையாளர்கள் அந்த குடியிருப்பின் மதிப்பிடப்பட்ட தொகையில் இருந்து 1% வரியாக செலுத்த நேரிடும்.

புதிதாக வரி விதிக்கப்படுவதால் சில உரிமையாளர்கள் தங்கள் குடியிருப்புகளை விற்பனைக்கு அல்லது வாடகைக்கு விடுவது என பட்டியலிட தூண்டும் எனவும் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதனால் குடியிருப்புகளை வாங்க திட்டமிட்டிருக்கும் மக்களுக்கு சாதகமாக இருக்கும் எனவும் கூறுகின்றனர். குடியிருப்பு உரிமையாளர்கள் பிப்ரவரி 2ம் திகதிக்குள், தங்கள் குடியிருப்புகளின் நிலை தொடர்பில் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

இதனையடுத்து நகர நிர்வாகம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் வரி விதிப்பது தொடர்பில் தகவல் தெரிவிக்கும். பிப்ரவரி 2ம் திகதிக்கு பின்னர் தகவல் தெரிவிக்கும் உரிமையாளர்கள், குறைந்தபட்சம் 250 டொலர் அபராதம் செலுத்த நேரிடும்.

ரொறன்ரோவில் மொத்தம் எத்தனை குடியிருப்புகள் காலியாக உள்ளது என்ற தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. 2017ல் வெளியான அறிக்கை ஒன்றில், 15,000 முதல் 28,000 குடியிருப்புகள் காலியாக இருக்கலாம் என கூறப்பட்டது.