மார்கம் நகரில் செவ்வாய்கிழமை அதிகாலை கட்டுமானத்தில் இருந்த குடியிருப்புகளுக்குள் பரவிய தீ, காரணமாக ஐந்து மில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட சேதத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என நகரின் தீயணைப்பு துறை தலைவர் கூறுகிறார்.
பழைய கென்னடி சாலை (Old Kennedy Road) மற்றும் ஆல்டர்கிரோவ் டிரைவ் (Aldergrove Drive) அருகே கட்டுமானத்தில் இருந்த குடியிருப்பு தொகுதியில் தீ பரவியது. அந்த குடியிருப்புகள் காலியாக இருந்ததால், மக்களுக்கு உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை.
“நாங்கள் மூல கட்டிட தொகுதியில் உள்ள நான்கு குடியிருப்புகளை இழந்தாலும், வடக்கு பகுதியில் இருந்த ஆறு குடியிருப்புகள் மற்றும் மேற்கு பகுதியில் இருந்த 12 குடியிருப்புகளை பாதுகாக்க முடிந்தது,” என மார்கம் தீயணைப்பு துறை தலைவர் கிரிஸ் நீரிங் (Chris Nearing) செவ்வாய்கிழமை காலை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பெரும் தீயினால் கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்கள் தீவிரமாக எரிந்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
தீ பற்றிய காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீவிபத்துக்கான காரணத்தை வெளிக்கொணர மார்கம் தீயணைப்பு துறை மற்றும் தீ பாதுகாப்பு அலுவலகம் (OFM) இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
“சேதத்தைக் கருத்தில் கொண்டால், தீயின் சரியான காரணத்தைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கலாம்,” என்று நீரிங் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதால், விசாரணை அதிகாரிகள் அந்த காணொளிகளை பாதுகாக்க முயற்சித்து வருகின்றனர்.
தீயணைப்பு மற்றும் மீட்பு குழுக்கள் இன்னும் சில மணி நேரங்களுக்கும், ஒருவேளை முழு நாளும் சம்பவ இடத்தில் இருக்கலாம் என்று நீரிங் கூறினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.