கனடாவில், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்துக்களைத் தாக்கிய விடயம் பூதாகாரமாகிவருகிறது.
இந்நிலையில், காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக இந்துக்களும் சீக்கியர்களும் ஒன்றுபட்டு தெருக்களில் பேரணி நடத்திய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்துக்களும் சீக்கியர்களும் எதிரிகள் என்பதுபோன்ற ஒரு தோற்றத்தை கனடா அரசியல்வாதிகள் உருவாக்கியுள்ளார்கள்.
ஆனால், அது உண்மையில்லை, தங்களை வைத்து அரசியல்வாதிகள் அரசியல் செய்கிறார்கள் என்பதைக் காட்டும் வகையில், காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக இந்துக்களும் சீக்கியர்களும் ஒன்றுபட்டு கனடா தெருக்களில் பேரணி நடத்தியுள்ளார்கள்.
கனடாவில் இதுபோல் இதற்கு முன் நடந்ததில்லை என்கிறார்கள் ஊடகவியலாளர்கள்.
அதேபோல, தங்களைத் தாக்கியது ஒரு சிறிய கூட்டம் காலிஸ்தான் பிரிவினைவாதிகள்தான், சீக்கியர்கள் அல்ல என்கிறார்கள் இந்துக்கள் சிலர்.
இந்துக்களும் சீக்கியர்களும் சகோதரர்கள், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சீக்கியர்கள் அல்ல, எனக்கும் சீக்கிய நண்பர்கள் உண்டு. அவர்கள் இப்படி இந்து வெறுப்பு காட்டுவதில்லை என்பதை கனேடியர்களுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்கிறார் இந்திய வம்சாவளியினர் ஒருவர்.
காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியது, மற்றும் இந்துக்களைக் காப்பாற்ற பீல் பகுதி பொலிசார் தவறியதைத் தொடர்ந்து, இந்துக்களும், சீக்கியர்களும், கிறிஸ்தவர்களும், ஈரானியர்களும் ஆயிரக்கணக்கில் ஒன்று திரண்டு தங்கள் சமுதாயத்தினருக்கு ஆதரவு தெரிவிக்க வந்ததை நான் கண்ணால் பார்த்தேன் என சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார் கனேடிய ஊடகவியலாளரான Daniel Bordman என்பவர்.