Reading Time: < 1 minute

கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக தலைநகர் ஒட்டாவாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதையடுத்து, பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறியுள்ளார்.

ஏற்கனவே தனது குழந்தைகளில் ஒருவர் கொவிட்-19 தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்ததை அடுத்து, அவர் தொலைதூரத்தில் இருந்து தனது பணியை முன்னெடுத்து வந்தார்.

இந்தநிலையில், போராட்டம் வலுப்பெற்றதையடுத்து பாதுகாப்பு கருதி பிரதமர் ஜஸ்டீன் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கனடா அரசாங்கம் கொரோனா தடுப்பூசி கட்டாயம் உள்ளிட்ட பல விதிமுறைகளை அமுல்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக மக்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

முதலில், கனடாவிலிருந்து வீதி வழியாக பிற நாடுகளுக்கு சென்று வரும் சரக்கு வாகன ஓட்டிகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக சரக்கு வாகன ஓட்டிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பொதுமக்களும் பங்கேற்க தொடங்கியதில் சுதந்திரப் பேரணி என்ற பெயரில் பெரும் போராட்டமாக உருமாறியது.

சிறுவர்கள், பெரியவர்கள், முதியவர்கள் என பல தரப்பு மக்களும் கையில் பதாகைகளை ஏந்தியபடி கட்டாய தடுப்பூசி மற்றும் பிற கொரோனா விதிமுறைகளை நீக்க வலியுறுத்தி அமைதியான போராட்டத்தை வீதிகளிலும், நாடாளுமன்றத்தின் முன் பனி மூடிய புல்வெளிகளிலும் நடத்தினர்.

பின் நாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்து கன்னட பிரதமருக்கு எதிரான வாசகங்களை கூறி விமர்சித்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.