Reading Time: < 1 minute

கனடாவில் கடமான் (Moose) வேட்டையில் ஈடுபட்ட நான்கு அமெரிக்கப் பிரஜைகள் மற்றும் இரண்டு கனேடிய பிரஜைகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோவின் வடகிழக்கு பகுதியின் ரெட் லேக் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் மீன்கள் மற்றும் வனவிலங்கு சேவை மற்றும் ஒன்றாரியோவின் வன மற்றும் இயற்கை வள அமைச்சு என்பன கடந்த 21 மாதங்களாக இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

படகிலிருந்து இந்த கடமான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தப் பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் சட்டவிரோத வேட்டையாடுதல் நடவடிக்கைகள் பல இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோதமாக கடமான் வேட்டையில் ஈடுபட்டதனை ஒப்புக் கொண்ட குறித்த நபர்களுக்கு சுமார் 50000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குற்றச் செயலுடனான பங்களிப்பின் அடிப்படையில் அபராதத் தொகை மாறுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு வேட்டையாடுவதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளது.