போலி கடனட்டை சேவை நிலையங்கள் என்ற போர்வையில் கனடா உள்ளிட்ட வௌிநாட்டவர்களிடம் மோசடி செய்து வந்த 32 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடனட்டை வாடிக்கையாளர்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி வங்கி முகாமையாளர் போன்று உரையாடி கடனட்டை விபரங்களை மேம்படுத்துவதாக தெரிவித்து ரகசிய தகவல்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.
இந்த மோசடி குறித்த விபரம் அறிந்தவர்கள் அந்த அழைப்பை துண்டித்துவிடுகின்றனர். ஆனால் இதுபற்றி தௌிவற்றவர்கள் தங்களின் கடனட்டை விபரங்களை கொடுத்துவிட்டு பணத்தையும் இழக்கின்றனர்.
அதேவேளை, கடனட்டையில் கடன் எல்லையை பல மடங்கு அதிகரித்து புதிய அட்டையை விநியோகிக்கப் போவதாக தெரிவித்து பயனர்களின் ஆர்வத்தை தூண்டியும் அந்த குழுவினர் மோசடிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், கனடாவைச் சார்ந்த ஒருவருக்கு அந்த அரசாங்கம் வழங்கியுள்ள சமூக காப்பீட்டுத் திட்ட எண்ணைப் பயன்படுத்தி இந்தியாவை சேர்ந்த ஒருவர் 13,500 அமெரிக்க டொலர் மோசடி செய்துவிட்டதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கனடா பொலிஸார் கடந்த நவம்பர் 15ம் திகதி இந்திய பொலிஸாருக்கு தகவல் அனுப்பி இதுபற்றி விசாரணை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து சர்வதேச எண்ணுக்கு சென்ற அழைப்புகளை ஆய்வு செய்து டெல்லியில் முறைகேடாக செயல்பட்டு வந்த வாடிக்கையாளர் சேவை நிலையம் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு தனியார் அலுவலகத்தை போன்று மிகவும் சொகுசாக அமைக்கப்பட்டிருந்த குறித்த வாடிக்கையாளர் சேவை நிலையத்தை கண்டு டெல்லி பொலிஸாரே ஆச்சரியமடைந்தனர்.
இந்த மோசடி குழுவை விசாரித்தபோது வங்கியிலிருந்து பேசுவதாக கூறி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மோசடி செய்தது உறுதியானது.
குறித்த மோசடி குழுவினர் யார் யாரிடமிருந்து பணத்தை மோசடி செய்தார்கள். அதை என்ன செய்தார்கள் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கனடா பொலிஸார் முறைப்பாடு அளித்த 48 மணி நேரத்தில் முழு மோசடி குழுவினரையும் டெல்லி பொலிஸார் கைது செய்யதுள்ளனர்.