கனடாவில் கடந்த 2021ல் மருத்துவ உதவியுடன் கருணைக் கொலைக்கு உட்பட்டவர்கள் எண்ணிக்கை பத்தாயிரம் தாண்டியுள்ளதாக பெடரல் ஆண்டு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
2020ல் இருந்து குறித்த எண்ணிக்கையானது 32% அதிகரித்துள்ளதாகவும் பெடரல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடாவில் 2021ல் பதிவான இறப்பில் 3.3 சதவீதம் (10.064) மருத்துவ ரீதியான கருணைக் கொலை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிராந்திய ரீதியாக கியூபெக்கில் 4.7% எனவும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 4.8% எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தை விடவும் சில கனேடிய பிராந்தியங்களில் அதிக எண்ணிக்கையிலான கருணைக் கொலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மட்டுமின்றி, கனடாவின் அனைத்து பிராந்தியங்களிலும் 1.2% அளவுக்கு கடந்த ஆண்டைவிடவும் மருத்துவ ரீதியான கருணைக் கொலை அதிகரித்துள்ளது. கருணைக் கொலைக்கு உட்படுபவர்களில் 52.3% ஆண்கள் எனவும் பெண்களில் 47.7% எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணைக் கொலைக்கு உள்ளாகும் நபரின் சராசரி வயது 76.3 எனவும், கருணைக் கொலைக்கு உள்ளானவர்களில் 65% பேர்கள் புற்றுநோயால் அவதிப்பட்டவர்கள் எனவும் கூறப்படுகிறது.
இருதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 19% எனவும் தெரிய வந்துள்ளது. மேலும், கருணைக் கொலைக்காக அனுமதி கோரியவர்களில் 81% பேர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.