கனடாவில் ஒருநாள் சராசரி தொற்று நோயாளர் தொகை இந்த மாதத்தில் 100,000 முதல் 250,000 வரை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக புதிய உத்தேச கணிப்பீட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரோன் திரிபு கனடாவில் முந்தைய அனைத்து கொவிட் அலைகளையும் முறியடித்து மிகப் பெரிய எழுச்சியை இந்த மாதத்தில் ஏற்படுத்தலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் தொற்று பரவல் பெப்ரவரியில் உச்சத்தை அடையாலம். அதன் பின்னர் பரவல் வேகம் குறையக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் உத்தேச கணிப்பீடு கூறுகிறது.
கனடாவின் பொது சுகாதார நிறுவனம் வெளியிட்ட புதிய உத்தேச கணிப்பீட்டறிக்கையை சுட்டுக்காட்டிய, கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம், வரவிருக்கும் வாரங்களில் தொற்று நோய் முன்னொருபோதும் இல்லாதவாறு தீவிரமடையாலாம். இதன் எதிர்மறை விளைவுகள் கணிசமாக இருக்கலாம் என நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ஒமிக்ரோன் திரிபின் அதிவேக பரவல் நாம் முன்னர் அனுபவித்தை விட மோசமாக இருக்கலாம் எனவும் அவா் குறிப்பிட்டார். அத்துடன், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பவோரின் எண்ணிக்கையும் முந்தைய சாதனை மட்ட அதிகரிப்புக்களை முறியடித்து உயரலாம் எனவும் டாம் கூறினார்.
ஒமிக்ரோன் திரிபினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை அனுமதி தேவைப்படுவோரது எண்ணிக்கை முன்னைய திரிபுகளுடன் ஒப்பிடுகையில்குறைவாகவே உள்ளது.
எனினும் இந்தத் திரிபின் பரவல் வேகத்தால் பெருந்தொகையானோர் பாதிக்கப்படுவதால் மருத்துவமனை சோ்க்கை வீதமும் அதிகரிக்கிறது. இதனால் மருத்துவமனைகள் கடும் அழுத்தங்களை எதிர்கொண்டு வருகின்றன.
கனடா முழுவதும் கடந்த ஏழு நாட்களில் 6,779 கொவிட் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவா்களில் 883 பேர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். 82 பேர் இறந்துள்ளனர் எனவும் கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் தெரிவித்தார்.
20 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களிடையே தொற்று பரவல் வேகம் அதிகமாக உள்ளது. அதேநேரம் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மத்தியில் மருத்துவமனை சோ்க்கை வீதம் அதிகரித்து வருகிறது எனவும் அவா் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜனவரி கடைசி வாரத்தில் கனடாவில் ஒட்டுமொத்த தொற்று நோயாளர் தொகை 3.5 மில்லியனுக்கும் அதிகமாக உயரலாம். அத்துடன், ஒட்டுமொத்த கொவிட் மரணங்களும் 32,600 ஆக அதிகரிக்கலாம் எனவும் புதிய உத்தேச மாதிரிக் கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனேடியர்கள் முகச் கவசங்களை அணிதல், சமூக இடைவெளி பேணுதல் உள்ளிட்ட அனைத்து சுகாதார வழிகாட்டல்களையும் கவனமாகக் கடைப்பிடித்து தொற்று நோயின் தீவிரத்தைத் தணிக்க உதவ வேண்டும் என கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் கோரிக்கை விடுத்துள்ளார்.