சீனாவில் இருந்து வெளியேறும் உய்குர் மக்களை கனடாவில் மீள்குடியேற்றும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் முடிவு சீனாவின் எதிர்ப்பை சம்பாதிக்கும் என எச்சரித்துள்ளனர்.
சீனாவில் இருந்து வெளியேறும் 10,000 உய்குர் மக்களுக்கு கனடாவில் குடியேறும் வாய்ப்புகள் அளிக்க ட்ரூடோ நிர்வாகம் ஒருமனதாக பிரேரணை நிறைவேற்றியுள்ளது.
முக்கியமாக சின்ஜியாங் மாகாணத்தில் சீன நிர்வாகத்தின் அடக்குமுறையிலிருந்து தப்பி ஓடுகிற மக்களுக்கு இந்த வாய்ப்பளிக்க கனடா முடிவு செய்துள்ளது, சீனாவை கோபத்தில் தள்ளலாம் என கூறுகின்றனர்.
சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இஸ்லாமிய மக்கள் கொத்தாக தடுப்புக்காவலில் வைக்கப்படுகின்றனர். பெற்றோரிடமிருந்து குழந்தைகளை தன்னிச்சையாகப் பிரித்து வைக்கப்படுகின்றனர். மட்டுமின்றி கட்டாய கருத்தடை, கட்டாய உடல் உழைப்பு, சித்திரவதை என கொடூர துன்புறுத்தல்களுக்கு இலக்காகின்றனர்.
இந்த நிலையில், 2024ல் தொடங்கி எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் கனடாவில் ஏறக்குறைய 10,000 உய்குர் அகதிகளை மீள்குடியேற்றம் செய்வதற்கான ஒருமனதான தீர்மானத்தை கனேடிய பாராளுமன்றம் நிறைவேற்றியது.
மேலும், உய்குர் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை கனடா ஒருபோதும் ஏற்காது என்பதை இதனால் தெளிவுப்படுத்தியுள்ளோம் எனவும் முக்கிய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் இந்த விவகாரம் தொடர்பில் வியாழக்கிழமை தெரிவிக்கையில், சின்ஜியாங் மாகாணம் தொடர்புடைய பிரச்சனையை தேவையின்றி பெரிதுபடுத்தி, பொதுமக்களிடையே தவறான கருத்தினை கனடா பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், வரலாற்றை பரிசோதித்தால், பூர்வகுடி மக்களின் நிலங்களை அபகரித்து, அவர்களை கொன்று அவர்களின் கலாச்சாரத்தை ஒழித்த நாடு கனடா என்பது அம்பலமான ரகசியம் என குறிப்பிட்டுள்ளார்.
அப்படியான ஒரு அரசாங்கம் உய்குர் மக்கள் மீது கரிசனம் கொள்வதாக கூறுவது வேடிக்கை என குறிப்பிட்டுள்ளார் Jiang Duan என்ற மூத்த சீன அதிகாரி.