கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் அடுத்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடரும் கொரோனா பரவலால் தடைபடும் உணவுப் பொருட்களின் விநியோகம், ஊழியர்கள் தட்டுப்பாடு மற்றும் பாதகமான வானிலை காரணமாக இந்த விலை உயர்வு ஏற்படும் என புதிய ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், சராசரியாக நான்கு பேர் கொண்ட கனடிய குடும்பம் ஒன்று 2022ல் உணவுக்காக $966 கூடுதலாகச் செலவிட நேரும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனால் உணவுப் பொருட்களுக்காக 2022ல் சராசரியாக 14,767 டொலர் செலவிடும் நிலை வரும் என கணித்துள்ளனர். இது 2021ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7% அதிகரிப்பு எனவும், மலிவு விலையில் உணவுப் பொருட்கள் கிடைத்துவந்த காலகட்டம் முடிவுக்கு வந்துள்ளது எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
2010ல் இருந்தே உணவுப் பொருட்களின் விலையில் மாறுதல் காணப்பட்டு வந்ததாகவும், ஆனால் கொரோனா பெருந்தொற்று அதை மேலும் அதிகரிக்க செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உணவுக்கான செலவுகள் உயர்வதால் கனடாவில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றாட உணவுக்காக போராடும் மக்களுக்கு இது பேரிடியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.