Reading Time: < 1 minute

கனடாவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதால் நுகர்வோர் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் இன்னும் சில மாதங்களுக்கு விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

கனடாவில் கடந்த ஜனவரி முதல் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 5 முதல் 25 வீதம் வரை உயர்ந்துள்ளதாக ஹாலிபாக்ஸில் உள்ள டல்ஹவுசி பல்கலைக்கழகத்தின் விவசாய உணவுப் பகுப்பாய்வு ஆய்வகத்தின் பணிப்பாளர் சில்வைன் சார்லபோயிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கனேடியர்களை பாதிக்கும் பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என்று பாங்க் ஒப் கனடா ஆளுநர் டிப் மக்லெம் எச்சரித்துள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் 4.1 சதவீதமாக இருந்த பணவீக்க வீதம் தற்போது 4.4 வீதமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இது ஐந்து வீதத்தை எட்டலாம் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.

மாட்டிறைச்சியின் விலை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கோழியின் விலை, பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முதல் மூன்று வீதம் அதிகரிக்கும் ஆனால் இவ்வாண்டு கோழி இறைச்சி விலை 13 வீதம் உயர்ந்துள்ளது. பன்றி இறைச்சியும் விலை உயர்ந்துள்ளது என டல்ஹவுசி பல்கலைக்கழகத்தின் விவசாய உணவுப் பகுப்பாய்வு ஆய்வகத்தின் பணிப்பாளர் சில்வைன் சார்லபோயிஸ் சுட்டிக்காட்டுகிறார்.

அதிகரித்துள்ள செலவீனங்களை ஈடுகட்டும் வகையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில், பால் விலையை உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாதவாறு உலகளாவிய ரீதியில் உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.