கனடாவில் உணவுப்பொருட்களின் விலைகள் விண்ணைத்தொட்டுள்ள நிலையில், கனேடியர்கள் சிலரின் மன நிலைமையில் மாற்றம் காணப்படுகிறது. ஆம், விலையுயர்ந்த உணவுப்பொருட்களை பல்பொருள் அங்காடிகளிலிருந்து சிலர் திருடத் துவங்கியுள்ளார்கள்.
கடந்த வாரம், Dalhousie பல்கலைப் பேராசிரியரான Sylvain Charlebois என்பவர், உணவுப்பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து கனடாவில் உணவுப்பொருட்கள் திருட்டு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், கனடாவில் வாரம் ஒன்றிற்கு 2,000 முதல் 5,000 டொலர்கள் மதிப்பிலான உணவுப்பொருட்கள் பல்பொருள் அங்காடிகளிலிருந்து திருடப்படுவதாகவும், திருட்டினால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய, கடைக்காரர்கள் பொருட்களின் விலைகளை மேலும் உயர்த்துவதாகவும், கடைசியில் திருடப்பட்ட பொருட்களுக்கான செலவையும் நாம் கொடுக்கவேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், பல்பொருள் அங்காடிகளிலிருந்து உணவுப்பொருட்களை திருடியவர்கள், தாங்கள் திருடியது குறித்து சமூக ஊடகங்களிலேயே வெளிப்படையாகவே கூறத்தொடங்கிவிட்டார்கள்.
அதைவிடக் கொடுமை என்னவென்றால், அப்படி திருடியவர்களுக்கு பலர் சமூக ஊடகங்களில் வெளிப்படையாக ஆதரவும் தெரிவித்துள்ளதுதான்.
யாராவது பல்பொருள் அங்காடிகளில் உணவுப்பொருட்களை திருடுகிறார்களா? பார்த்தும் பார்க்காததுபோல் போய்விடுங்கள் என்கிறார் ஒருவர்.
பல்பொருள் அங்காடிகளில் திருடப்படும் உணவுப்பொருட்களை விட, அவர்கள் ஏராளமான உணவுப்பொருட்களை வீணாக்குகிறார்கள். ஆகவே, திருடுவது தவறில்லை, நியாயமானதே என்னும் தொனியில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஒருவர்.
ஆக, பல்பொருள் அங்காடிகளில் உணவுப்பொருட்களை திருடும் விடயம் நடைபெறுவதுடன், அது நியாயமானதே என மக்கள் கருதும் ஒரு நிலையும் உருவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.