Reading Time: < 1 minute

கனடாவின் நோவா ஸ்கொஷியா மாகாணத்தின் தலைநகரான ஹாலிஃபாக்ஸ் (Halifax, Nova Scotia) நகரில், ஆறு வயது சிறுவன் ஒருவனை கத்தியால் குத்தியதாக இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமையன்று, சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகை தரும் ஹாலிஃபாக்ஸிலுள்ள Scotia Square Mall என்னுமிடத்தில், ஆறு வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக அங்கு பொலிசாரும் மருத்துவ உதவிக்குழுவினரும் விரைய, அந்தச் சிறுவன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளான்.

அந்தச் சிறுவனைக் கத்தியால் குத்திய எலியட் ( Elliott Chorny, 19) என்னும் இளம்பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் திங்கட்கிழமை ஹாலிஃபாக்ஸ் மாகாண நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், காவலில் அடைக்கப்பட்டுள்ளார். மீண்டும் அவர் மார்ச் மாதம் 13ஆம் திகதி நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட உள்ளார்.

இந்நிலையில், எலியட்டின் தாயான ஆண்ட்ரியா (Andrea Hancock), தன் மகள் குறித்து சில அதிரவைக்கும் விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

எலியட்டுக்கு மன நலனில் பாதிப்பு உள்ளதாகவும், அவர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தானும் தன் கணவரும் பல ஆண்டுகளாக பொலிசார், மருத்துவர்கள், சிறார் பாதுகாப்பு அமைப்பு என பல தரப்பிலிருந்தும் தங்கள் மகளுக்கு உதவி பெற முயன்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார் ஆண்ட்ரியா.

அதைவிட பயங்கரம் என்னவென்றால், தங்கள் மகளான எலியட்டால், தங்கள் இன்னொரு பிள்ளைக்கு ஏதாவது ஆபத்து வரக்கூடாது என்பதற்காக, எலியட் தங்கள் வீட்டில் வாழவில்லை என்றும், அவர் வீடற்றவராக வெளியில் வாழ்ந்துவந்ததாகவும் தெரிவித்துள்ளார் ஆண்ட்ரியா.

இதற்கிடையில், கத்தியால் குத்தப்பட்ட சிறுவனுடைய நிலைமை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.