Reading Time: < 1 minute

இலங்கை ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று அழைப்பு விடுத்து, ரொறன்ரோவில் வசிக்கும் இலங்கை மக்கள் டசின் கணக்கானோர் ஸ்கார்பரோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்கார்பரோவில் சனிக்கிழமை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள், கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியபடி, இலங்கையில் தற்போதைய ஆட்சி அகற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் அவரது அரசாங்கத்திற்கும் எதிராக அண்மைய வாரங்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஐக்கியமாக ஸ்கார்பரோ பேரணி இடம்பெற்றுள்ளது.

1948ல் பிரித்தானிய சாம்ராஜ்யத்திடம் இருந்து சுதந்திரம் அடைந்ததில் இருந்து நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்ச தவறாக நிர்வகித்ததாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாட்டில் எரிவாயு இல்லை, பால் இல்லை, பெட்ரோல் இல்லை, மின்சாரம் இல்லை. மக்கள் அவதிப்படுகின்றனர் என பேரணியில் கலந்து கொண்ட ரொறன்ரோவை சேர்ந்த அலெக்ஸ் பெர்னாண்டோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கை தற்போது திவால் விளிம்பில் உள்ளது எனவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 25 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுக் கடனில் சிக்கியுள்ளதாகவும், இந்த ஆண்டில் இதுவரை மட்டும் 7 பில்லியன் அமெரிக்க டொலர் கடனாளியாக மாறியுள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனிடையே, சர்வதேச நாணய நிதியத்துடன் இந்த மாத இறுதியில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றன, மேலும் உணவு மற்றும் எரிபொருளை வாங்குவதற்கு அவசரகால கடன்களுக்காக சீனா மற்றும் இந்தியாவை இலங்கை நாடியுள்ளது.