இன்று நவம்பர் 30, 2021 முதல், கனடாவுக்கு வரும் 12 வயதுக்கு மேற்பட்ட பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும்.
கனேடிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட, ரயில் முதல் விமானம் வரையிலான ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட போக்குவரத்து முழுமைக்கும் இந்த புதிய விதிகள் பொருந்தும். பேருந்துகளுக்கு மட்டும் இந்த விதியிலிருந்து விலக்கு.
கனடா, இந்த கட்டுப்பாட்டை அக்டோபர் மாதம் 30ஆம் திகதி அறிவித்தது. அப்போது, கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என நிரூபிப்பவர்களுக்கு மட்டும் ஒரு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த கால அவகாசம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது.
தற்போது, மருத்துவக் காரணங்களால் தடுப்பூசி பெற இயலாத நிலையிலிருப்பவர்கள் முதலான சிறு கூட்டத்தினருக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோக, தடுப்பூசி பெறாத வெளிநாட்டவர்கள் கனடாவிலிருந்து விமானம் வாயிலாக வெளியேற அனுமதிக்கும் வகையில், பிப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரை தற்காலிகமாக ஒரு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பயன்படுத்த விரும்பும் பயணிகள், விமானம் ஏறும் முன் கொரோனாவுக்கான மூலக்கூறு (molecular test for COVID-19) பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என நிரூபிக்கவேண்டும். அதுவும், அக்டோபர் 30க்கு முன் கனடாவுக்குள் நுழைந்தவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை.
மேலும், இன்று முதல், முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்ற, கனடாவுக்குள் நுழைய அங்கீகாரம் பெற்ற பயணிகள் வெளிநாடு சென்றுவிட்டு 72 மணி நேரத்திற்குள் கனடாவுக்கு திரும்பும் பட்சத்தில், அவர்கள் கனடாவுக்குள் நுழையும் முன், இந்த மூலக்கூறு பரிசோதனை செய்திருக்கவேண்டிய அவசியம் இல்லை.
இந்த விதிவிலக்கு கனேடிய குடிமக்கள், நிரந்தர வாழிட உரிமம் கொண்டவர்கள் அல்லது இந்திய சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட முழுமையான தடுப்பூசி பெற்றவர்களுக்கு மட்டுமே. அதுவும் அவர்கள் விமானம் அல்லது நிலம் வாயிலாக பயணித்தால் மட்டுமே இந்த சலுகை. அவர்கள் தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தைக் காட்டத் தயாராக இருக்கவேண்டும். 12 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் மற்றும் மருத்துவக் காரணங்களால் தடுப்பூசி பெற இயலாதவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும்.
72 மணி நேரத்துக்கு அதிகமாக வெளிநாட்டில் நேரம் செலவிடும் எந்த பயணியும், கனடாவுக்குள் நுழைவதற்கு முன், மூலக்கூறு கொரோனா பரிசோதனை செய்துகொண்டிருக்கவேண்டும். ஆன்டிஜன் சோதனைகள் கனடாவில் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.
இந்த ஆண்டு பிப்ரவரி முதலே, கனடாவுக்கு வரும் ஐந்து வயதுக்கு மேற்பட்ட சர்வதேச பயணிகள் அனைவரும், அவர்கள் தடுப்பூசி பெற்றிருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, அவர்கள் கொரோனா பரிசோதனை செய்தாகவேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.
இன்று முதல், மூன்று புதிய தடுப்பூசிகளை கனடா அங்கீகரிக்கத் துவங்கியுள்ள நிலையில், இனி கீழ்க்கண்ட தடுப்பூசிகள் பெற்றவர்கள், கொரோனாவுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களாக அங்கீகரிக்கப்படுவர். அவையாவன, Sinopharm, Sinovac, COVAXIN, Pfizer-BioNTech, Moderna, AstraZeneca மற்றும் Janssen/Johnson & Johnson.
கனடாவுக்கு வருபவர்கள், முழுமையான தடுப்பூசி பெற்ற பயணிகள் என அங்கீகரிக்கப்படவேண்டுமானால், அவர்கள் கனடாவுக்கு வருவதற்கு குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன் அங்கீகரிக்கப்பட்ட முழுமையான டோஸ் தடுப்பூசியை பெற்றிருக்கவேண்டும். அதற்கான ஆதாரம், தனிமைப்படுத்தலுக்கான திட்டம் ஆகியவற்றையும் அவர்கள் முன்கூட்டியே ArriveCAN எனப்படும் ஒன்லைன் விண்ணப்பம் வாயிலாக கனடாவுக்குள் நுழைவதற்கு முன் சமர்ப்பித்திருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.