Gurasis Singh - Lambton College international student killed in stabbing
Reading Time: < 1 minute

கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள Sarnia நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு ஞாயிற்றுக்கிழமையன்று பொலிசார் அழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அந்த வீட்டுக்குச் சென்றபோது, அங்கு ஒரு இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்துள்ளது.

செவ்வாயன்று அந்த இளைஞரின் உடற்கூறு ஆய்வுகள் முடிவடைந்த நிலையில், அவரது பெயர் குராசிஸ் சிங் (22) என்றும், அவர் இந்தியாவிலிருந்து கல்வி கற்பதற்காக கனடாவுக்கு வந்தவர் என்பதும், Lambton கல்லூரியில் அவர் படித்துவந்தார் என்பதும் தெரியவந்தது.

சிங்கை கொலை செய்ததாக, அவருடன் தங்கியிருந்த கிராஸ்லீ ஹண்டர் (36) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டின் சமையலறையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அது சண்டையாகி, ஹண்டர் சிங்கை கத்தியால் குத்தும் நிலைக்குச் சென்றுள்ளது.

பலமுறை கத்தியால் குத்தப்பட்ட சிங், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகிவிட்டார்.

இதற்கிடையில், இது இனவெறுப்பு காரணமாக நடந்த கொலை அல்ல என்று கூறியுள்ள பொலிசார் தொடர்ந்து அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

இந்நிலையில், இந்த துயர சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் சில வந்தவண்ணம் உள்ளன.

அதாவது, இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, குராசிஸ் சிங் படிக்கும் Lambton கல்லூரிமீது பலர் புகார்கள் தெரிவித்துள்ளார்கள்.

சர்வதேச மாணவர்களிடம் எக்கச்சக்கமான கல்விக்கட்டணம் வசூலிக்கும் கல்லூரி, முதல் ஆண்டு மாணவரான குராசிஸ் சிங்குக்கு கல்லூரி வளாகத்தில் தங்க இடம் கொடுத்திருக்கவேண்டும் என்கிறார்கள் சிலர்.

அவர் எப்படி கல்லூரிக்கு வெளியே அறை ஒன்றில் தங்க அனுமதிக்கப்பட்டார் என கேள்வி எழுப்பியுள்ள சிலர், பணம் வாங்கிவிட்டு மாணவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்காத Lambton கல்லூரி, அதன் பலனை அனுபவிக்கத் தொடங்கியுள்ளது என்கிறார்கள் அவர்கள்.