Reading Time: < 1 minute

கனடாவில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வீடுகளின் விலையில் பாரிய சரிவு ஏற்படும் என சாதகமான தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், கனேடிய வங்கி தொடர்ந்து வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது. இதனால், கனடாவில் வீடுகளின் விலை அடுத்த ஆண்டு இறுதிக்குள், தற்போதைய உச்சத்தில் இருந்து 15 சதவீதம் வரையில் குறையும் என்று ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.

பிப்ரவரி 2022 ல் கனடாவில் ஒரு வீட்டின் சராசரி விலை $790,000 ஆக உயர்ந்தது, இது கடந்த இரண்டு ஆண்டுகளில் 50 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது.

ஆனால், புதனன்று Desjardins வெளியிட்ட அறிக்கையில், டிசம்பர் 2023க்குள் சராசரி தேசிய வீட்டு விலை சுமார் $675,000 ஆகக் குறையக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, கனேடிய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தத் தொடங்கியதிலிருந்து, வீட்டு விலைகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன.

Desjardins வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடாவில் ஒரு வீட்டின் சராசரி விலை மார்ச் மாதத்தில் 2.6 சதவீதமும், ஏப்ரலில் 3.8 சதவீதமும் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

வீடுகளின் விலையில் எதிர்பார்த்த வீழ்ச்சி இருந்தபோதிலும், $675,000 என்பது டிசம்பர் 2019 ல் இருந்ததை விட கிட்டத்தட்ட 30 சதவிகிதம் அதிகமாக உள்ளது என்று Desjardins அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2019 டிசம்பரில் கனடாவில் ஒரு வீட்டின் சராசரி விலை $530,000 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.