பிரித்தானியாவில் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை என்ற திட்டம் சோதனைக்குட்படுத்தப்பட்டுவந்த நிலையில், அத்திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, அத்திட்டத்தின் வெற்றியால், கனேடிய நிறுவனங்களும் அத்திட்டம் குறித்து யோசிக்கத் துவங்கியுள்ளார்கள்.
பிரித்தானியாவில் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை என்ற திட்டத்தை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பல்வேறு துறைகளை சார்ந்த 61 நிறுவனங்கள் சோதனை முறையில் செயல்படுத்தி வந்தன. தற்போது இந்த திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியை பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் பாஸ்டன் கல்லூரி மற்றும் லண்டன் ஆய்வு அமைப்பான Autonomy ஆகியவை இணைந்து நடத்தின.
இந்த சோதனை திட்டம் பணியாளர்களின் மன அழுத்தத்தை வெகுவாக குறைத்த அதே நேரத்தில், அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களின் வருவாயும் முன்பை விட அதிகரித்துள்ளதும் ஆய்வில் தெரியவந்தது.
பிரித்தானியாவில் வாரத்திற்கு நான்கு நாள் வேலை திட்டம் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து கனேடிய நிறுவனங்களும் அதைப் பின்பற்றுவதில் ஆர்வம் காட்டிவருகின்றன.
இது குறித்து பேசிய கனடாவின் Toronto-based Work Time Reduction Center of Excellence என்ற அமைப்பின் இயக்குநரும், இணை நிறுவனருமான Joe O’Connor, இத்திட்டம் மக்கள் வேலை செய்யும் மணிநேரங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதைக் குறித்தது மட்டுமல்ல, அது மக்கள் வேலை செய்யும் முறையையே மாற்றுவதைக் குறித்ததாகும் என்கிறார்.
இந்த திட்டம் உலகம் முழுவதும் பரவி வரும் ஒரு திட்டம். அப்படியிருக்கும்போது, அந்த திட்டத்தை முதலில் அறிமுகம் செய்யும் நாடுகளில் ஒரு நாடாக கனடாவும் ஆக இது ஒரு நல்ல வாய்ப்பு என்கிறார் அவர்.
இது குறித்து கனடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், 91 சதவிகித மூத்த மேலாளர்கள், தங்கள் பணியாளர்கள் இத்திட்டத்தைப் பின்பற்றுவதை தாங்கள் ஆதரிப்போம் என்று கூறியுள்ளார்கள்.
அடுத்து முடிவெடுக்கவேண்டியது தலைவர்கள்தான் என்கிறார் Joe O’Connor.