Reading Time: < 1 minute

அதி வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் அதிக வீரியம் கொண்ட ஓமிக்ரோன் மாறுபாடு, கனடாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வட அமெரிக்காவில் பதிவான முதல் ஓமிக்ரோன் மாறுபாடு தொற்று ஆகும்.

ஒட்டாவாவில் கொரோனா வைரஸின் ஓமிக்ரோன் மாறுபாட்டின் இரண்டு உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் உள்ளன என்று ஒன்ராறியோ அரசாங்கம் அறிவித்தது.

இவை இரண்டும் நைஜீரியாவிலிருந்து சமீபத்தில் பயணம் செய்த நபர்களிடம் பதிவாகியுள்ளன என கனடாவின் சுகாதார அமைச்சர் ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ் கூறினார் தற்போது, இந்த நோயாளிகள் தனிமையில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வாரங்களில் தென்னாபிரிக்காவில் பல நாடுகளுக்குச் சென்ற வெளிநாட்டுப் பிரஜைகள் மீது புதிய பயணக் கட்டுப்பாடுகளை நாடு அமுல்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு, கனடாவில் உறுதிசெய்யப்பட்ட ஓமிக்ரோன் மாறுபாட்டின் முதல் தொற்றுகள் இவை ஆகும்.