கனேடிய நகரமொன்றில் வீடு ஒன்றிற்குள் ஆசிய நாட்டவர்கள் என கருதப்படும் பெண்கள் இருவர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் இருவர் சடலங்களாக கண்டெடுப்பு
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Richmond நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு பொலிசார் அழைக்கப்பட்டார்கள்.
பொலிசார் அங்கு விரைந்தபோது, அந்த வீட்டிற்குள் 43 வயது பெண் ஒருவரும், 14 வயது இளம்பெண் ஒருவரும், சடலங்களாக கிடப்பது தெரியவந்துள்ளது.
யார் அவர்கள்?
ஒருவர் மற்றவரை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிசார் கருதும் நிலையில், அந்த வீடு வாடகை வீடு என்பதால், அங்கு யார் வசிக்கிறார்கள் என அக்கம்பக்கத்தவர்களுக்கு சரியாகத் தெரியவில்லை.
அந்த வீட்டில், ஆசிய நாட்டவர்களான ஒரு பெண்ணும் அவரது இரண்டு மகள்களும் வாழ்ந்துவந்ததாக ஒருவர் கூறியுள்ள நிலையில், தற்போது உயிரிழந்துள்ளவர்கள் அந்த ஆசிய நாட்டவர்கள்தானா என்ற விடயத்தை பொலிசார் வெளியிடவில்லை.
அத்துடன், இறந்துகிடந்த பெண்கள் இருவரும் உறவினர்கள் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளதால், அவர்கள் தாயும் மகளுமா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை.
பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவருகிறார்கள்.