கனடாவின் பிராம்டனில் குடியிருப்பு ஒன்று தீ விபத்தில் சிக்கிய நிலையில், மூன்று பிள்ளைகள் உட்பட ஐவர் குடும்பம் மொத்தமாக உடல் கருகி பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்ராறியோவின் பிராம்டனில் திங்களன்று அதிகாலை குறித்த தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது. பலியானவர்கள் தொடர்பில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
திங்களன்று சுமார் 2 மணியளவில் பீல் பிராந்திய பொலிசாருக்கு அவசர உதவிக் கேட்டு அழைப்பு வந்ததாகவும், உடனடியாக சம்பவப்பகுதிக்கு உரிய அதிகாரிகளுடன் விரைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, அவசர உதவிக் குழுவினர் குடியிருப்பில் இருந்து ஐவரை சடலமாக மீட்டுள்ளதாகவும், ஆறாவது நபரை ஆபத்தான நிலையில் மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்கள், Nazir Ali மற்றும் Raven Ali-O’Dea, இவர்களின் மூன்று பிள்ளைகள் Alia(10), Jayden(8), Layla(7) ஆகியோர் என குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தீ விபத்து மற்றும் ஐவர் மரணம் தொடர்பில் உரிய அதிகாரிகள் விசாரணை முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.