கனடாவில் கொரோனாவின் நான்காவது அலை உருவாகுமானால், அது தடுப்பூசி பெறாதவர்களைத்தான் தாக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் கொரோனா பரவலை எதிர்க்கும் நிலையில், முன்போல் பெரிய அளவில் கொரோனா பரவலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதலும் இம்முறை இருக்காது, ஆகவே, பெரிய அளவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படப்போவதில்லை என்கிறார் ரொரன்றோ பல்கலைக்கழக தொற்றுநோயியல் நிபுணரான Dr. Colin Furness.
இம்முறை சிறு சிறு கூட்டங்களுக்குள் கொரோனா பரவும் என்று கூறும் அவர், உதாரணமாக தடுப்பூசியை தவிர்க்கும் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினரைச் சொல்லலாம் என்கிறார்.
அப்படி ஏதாவது ஒரு காரணத்துக்காக தடுப்பூசியை தவிர்த்த அந்த கூட்டங்கள்தான் இப்போது கொரோனாவின் நான்காவது அலையில் சிக்க இருக்கின்றன என்கிறார் அவர்.
அப்போது, அந்த கூட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டியிருக்குமே தவிர, மொத்த நாட்டுக்கும் அல்ல என்கிறார் அவர். ஆனால், இந்த தடுப்பூசி பெறாதவர்களால் வேறு வித பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தடுப்பூசி பெற்றவர்களுக்குக் கூட… அதாவது, இந்த தடுப்பூசி பெறாதவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படும் நிலையில், மீண்டும், பிற அறுவை சிகிச்சைகளை தள்ளிப்போடவேண்டிய நிலை உருவாகலாம்.
அத்துடன், தற்போதைய தடுப்பூசிகளுக்கு அடங்காத புதிய திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது.
ஆக, தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களால் எல்லோருக்கும் பிரச்சினைதான் என்று கூறும் அவர், இவர்களால், எளிதில் தவிர்த்திருக்க வாய்ப்புள்ள தொற்றும் இறப்புகளும் ஏராளம் நிகழவிருக்கின்றன என்கிறார்.