கனடாவின் தவறான குடியேற்ற தடுப்புக் காவல் கொள்கைகளால் அகதித் தஞ்சம் கோருபவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் உளவியல் ரீதியாக கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டு வருவதாக சா்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) ஆகிய சா்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளன.
“கனடாவின் குடிவரவு தடுப்புக்காவல் மற்றும் மன ஆரோக்கியத்தில் அதன் தாக்கம்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் தஞ்சம் கோரி கனடா வருவோர் கைதிகள் போன்று கைவிலங்கிடப்பட்டு நடத்தப்படுவது, தனிமைச் சிறையில் அடைக்கப்படுவது உள்ளிட்ட கடுமையான நிலைமைகளுக்கு உள்ளாக நேரிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது விடுவிக்கப்படுவார்கள்? என்பதை அறிய முடியாத வரம்பற்ற தடுப்புக் காவலில் குடியேற்றவாசிகள் வைக்கப்படுவதால் உளவியல் ரீதியான தாக்கங்கள் மோசமாக ஏற்படுகின்றன எனவும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
தஞ்சம் கோரி கனடா வரும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் அங்கு ஒவ்வொரு ஆண்டும் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
தஞ்சம் கோரி கனடா வரும் யாரேனும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கனடாவின் குடிவரவு சட்டங்களை அமுல்படுத்தும் கனடா எல்லைச் சேவை முகவரமைப்பு கருதினால் அவர்களைத் தடுத்து வைக்க முடியும். குடியேற்ற நடவடிக்கை செயன்முறைகளுக்கு அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். எனினும் அவா்களைத் தொடர்ந்து தடுத்து வைப்பதற்கான மாற்று வழிகளை கனடா எல்லைச் சேவை முகவரமைப்பு ஆராய வேண்டும்.
2016 மற்றும் 2020 க்கு இடையில் கனடாவில் குடியேற்ற கைதிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. 2019-2020 நிதியாண்டில் குடியேற்ற தடுப்புக்காவலில் 8,825 பேர் வைக்கப்பட்டிருந்ததாக சா்வதேச மனித உரிமை அமைப்புக்களின் இன்றைய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் நெருக்கடி காலத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தஞ்சக் கோரிக்கையாளர்களை கனேடிய அதிகாரிகள் முன்னர் எப்போதும் இல்லாதவாறு விரைவாக விடுவித்தனர். தடுப்புக் காவலுக்கான மாற்று வழிகள் உள்ளன என்பதை இது குறிக்கிறது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு கடந்த ஜூன் 14 ஆம் திகதி வரை 62 பேர் கனடாவில் குடியேற்ற தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும். மேலும் 97 குடிவரவு கைதிகள் மாகாண அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கனடா எல்லைச் சேவை முகவரமைப்பு சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு உறுதி செய்துள்ளது.
இதேவேளை, தடுப்பு மையங்களில் கொரோனா பரவல் அபாயம் உள்ளதைக் கருத்தில் கொண்டு குடியேற்ற தடுப்புக் காவலில் உள்ளவர்களை விரைவாக விடுவிக்குமாறு அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
உதாரணமாக, கியூபெக் மாகாண மொன்றியலுக்கு வடக்கே ஒரு தஞ்சக் கோரிக்கையாளர் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் தங்களை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
இந்தத் தடுப்பு மையத்துக்கு தினமும் எல்லா இடங்களில் இருந்தும் புதியவர்கள் வருகிறார்கள். வருவதற்கு முன்பு அவர்கள் எந்தவித பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுவதில்லை. அவர்களால் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக 2020 மார்ச் மாதம் மத்திய அரசாங்க அமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் வழக்கறிஞர்களால் அறிவிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் கனடா தடுப்பு மையங்கள் குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கனேடிய எல்லைச் சேவை முகவரமைப்பு செய்தித் தொடர்பாளர் ஜூடித் கட்போயிஸ்-சென்-சிர் (Judith Gadbois-St-Cyr) தெரிவித்துள்ளார்.
கனேடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் சாசனத்தையும், மனித உரிமைகளுக்கான சர்வதேச பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தரங்களையும் பேணுவதில் கனேடிய எல்லைச் சேவை முகவரமைப்பு உறுதிபூண்டுள்ளது எனவும் அவா் கூறினார்.
கனேடிய குடிவரவு சட்டத்தின் படி தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் கண்ணியமாகவும் மற்றும் மனிதாபிமானத்துடனும் நடத்தப்படுவார்கள் எனவும் ஜூடித் கட்போயிஸ்-சென்-தெரிவித்தார்.
எப்போதுமே தடுப்புக் காவல் என்பது எங்களது இறுதித் தெரிவாகவே உள்ளது. அதற்கு முன்னரான மாற்று வழிகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்ட பின்னரே தடுப்புக் காவல் முடிவு எடுக்கப்படும் எனவும் கனேடிய எல்லைச் சேவை முகவரமைப்பு செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் குடிவரவு தடுப்புக்காவலை படிப்படியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு சர்வதேச மன்னிப்புச் சபையின் கனடாவுக்கான பொதுச் செயலாளர் கெட்டி நிவ்யபாண்டி (Ketty Nivyabandi) அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
கனடாவின் தவறான குடியேற்ற தடுப்புக்காவல் முறைமை உலகளவில் கனடா குறித்து அறியப்பட்ட சமத்துவம் மற்றும் நீதிச் செயன்முறைகளை குறைமதிப்புக்கு உட்படுத்துவதாக அமையும் எனவும் அவா் குறிப்பிட்டார்.
பாதுகாப்பையும் சிறந்த வாழ்க்கையையும் தேடி கனடாவுக்கு வருவோருக்கு எதிரான இனவெறி, கொடுமை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு கனடாவில் இடமில்லை” என்று அவர் மேலும் கூறினார்.