கனடாவின் உணவுப் பாதுகாப்பையும் வேளாண்மைத் துறையின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் நோக்கில், தேனீக்களின் ஆரோக்கியம் தொடர்பான விரிவான அறிவியல் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கனடாவின் விவசாய உற்பத்திக்கும் உணவுப் பாதுகாப்பிற்கும் முக்கிய பங்காற்றும் மேற்கத்திய தேனீக்கள், நோய்கள், ஒட்டுண்ணிகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் அழுத்தங்கள் காரணமாக கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தச் சவால்களுக்கு தீர்வு காணும் வகையில், மனிடோபா பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் உணவு அறிவியல் பீடத்தில் பணியாற்றும் பூச்சியியல் உதவிப் பேராசிரியர் டாக்டர் நூரியா மோர்ஃபின் தலைமையில் விரிவான ஆய்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தேனீக்கள் தேன் உற்பத்திக்கு மட்டுமன்றி, பல்வேறு பயிர்களின் மகரந்தச் சேர்க்கைக்கும் இன்றியமையாதவையாக உள்ளன. இதன் மூலம் கனடாவின் பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் பல பில்லியன் டொலர் மதிப்பிலான பங்களிப்பை வழங்குவதுடன், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகின்றன என டாக்டர் மோர்ஃபின் தெரிவித்துள்ளார்.
தேனீக்களுக்கு தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக Varroa destructor எனப்படும் ஒட்டுண்ணிப் பூச்சி கருதப்படுகிறது. இந்த ஒட்டுண்ணி தேனீக்களின் உடலில் ஒட்டிக்கொண்டு அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துவதுடன், Deformed Wing Virus உள்ளிட்ட பல்வேறு வைரஸ் தொற்றுகள் பரவுவதற்கும் காரணமாகிறது.
இந்த ஒட்டுண்ணிகள், நுண்ணுயிரிகள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து தேனீக்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்து ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
மேலும், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்ட காலநிலைச் சூழல்கள், தேனீக்களின் நோய் எதிர்ப்பு திறன் மற்றும் உயிர்வாழும் தன்மையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதும் இந்த ஆய்வின் முக்கிய பகுதியாக இடம்பெறவுள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகள், கனடாவில் தேனீ இனங்களைப் பாதுகாப்பதற்கும், விவசாய உற்பத்தியை நிலைநிறுத்துவதற்கும், எதிர்கால உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.




