Reading Time: < 1 minute

கனடா விற்பனைக்கு அல்ல என்று கூறியுள்ள ட்ரூடோவின் முன்னாள் கூட்டணிக்கட்சித் தலைவரான ஜக்மீத் சிங், கனடாவின் இறையாண்மையைக் காப்பாற்ற போராடுவோம் என சூளுரைத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், கனடாவை குறிவைத்து வார்த்தைத் தாக்குதல்கள் நடத்திவருகிறார்.

கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்றும், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவை கனடாவில் ஆளுநர் என்றும் கேலி செய்துவந்தார் ட்ரம்ப்.

பின்னர், பொருளாதாரத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பேன் என மிரட்டலும் விடுத்துள்ளார் ட்ரம்ப்.

ட்ரம்புக்கு பதிலடி கொடுத்துள்ள ட்ரூடோ, கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாகக் கூறும் ட்ரம்பின் கனவு ஒருபோதும் பலிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், ட்ரூடோவின் முன்னாள் கூட்டணிக்கட்சியான New Democratic Party (NDP) கட்சியின் தலைவரான ஜக்மீத் சிங், டொனால்ட் ட்ரம்புக்கு நான் கூறும் செய்தி ஒன்று உள்ளது, கனடா விற்பனைக்கு அல்ல, இப்போதும் அல்ல, எப்போதுமே அல்ல, என்று கூறியுள்ளார்.

அத்துடன், கனடாவின் இறையாண்மையைக் காப்பாற்ற கடுமையாகப் போராட கனேடியர்கள் தயாராக இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார் சிங்.

அமெரிக்காவின் காட்டுத்தீ பற்றி எரிகிறது, அதை அணைக்க கனேடிய தீயணப்பு வீரர்கள் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்கள்.

அதுதான் கனேடியர்களாகிய நாங்கள், அதாவது, பக்கத்து நாட்டுக்கு ஒரு ஆபத்து என்றால் உதவி செய்ய ஓடோடி வருவோம். ஆனால், அதற்காக எங்களுடன் சண்டைக்கு வரலாம் என ட்ரம்ப் நினைப்பாரானால், அதற்கு அவர் விலை கொடுக்கவேண்டியிருக்கும்.

ட்ரம்ப் கனேடிய பொருட்கள் மீது வரி விதிப்பாரானால், பழிக்குப் பழி நடவடிக்கையாக நாங்களும் வரி விதிப்போம். அடுத்து யார் கனடாவின் பிரதமராக வந்தாலும் அதைத்தான் செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார் சிங்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.