கனடாவின் ஆளுநர் நாயகமாக பழங்குடி இனுக் சமூகத்தைச் சேர்ந்த மேரி சைமன் பதவியேற்றார்.
இதன்மூலம் கனடா வரலாற்றில் ஆளுநர் நாயகம் என்ற உயரிய பதவியை வகிக்கும் முதல் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவராக மேரி சைமன் சாதனை படைத்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற காலாசார மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளைத் தொடர்ந்து கனடாவின் 30-ஆவது ஆளுநர் நாயாகமாக அவா் பதவியேற்றுக்கொண்டார்.
இனுக் பழங்குடி சமூக முக்கிய தலைவரும் முன்னாள் டென்மார்க்கிற்கான கனேடிய தூதராகப் பணியாற்றியவருமான மேரி சைமன் சமூக, சுற்றுச்சூழல் ஆா்வலரும் மனித உரிமைகள் வழக்கறிஞருமாவார்.
கனடாவில் முன்னாள் பழங்குடியின பள்ளிகளில் அடையாளப்படுத்தப்படாத பல நூற்றுக்கணக்கான சிறுவர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மேரி சைமன் கனடாவின் ஆளுநர் நாயகமாகப் பதவியேற்றுள்ளார்.
கடந்த காலத்தில் நடந்த தவறுகளைத் திருத்திக்கொண்டு நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன் என ஆளுநர் நயகமாக நியமிக்கப்பட்ட மேரி சைமன் தெரிவித்தார்.
மனித நேயத்தை மதித்து, ஒருவருக்கொருவர் பொறுப்பைப் பகிர்ந்து கொண்டால் கனடாவை உயர்ந்த நிலைக்கு நாங்கள் இட்டுச் செல்ல முடியும் என அவர் கூறினார்.
வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (NAFTA ), கனடாவின் நில உரிமைக் கொள்கையை அமுலாக்க விவகாரம் உள்ளிட்ட பல விடயங்களில் அவர் பல ஆண்டுகளாக மத்திய அரசாங்கத்துடன் இணைந்து மேரி சைமன் பணியாற்றியுள்ளார்.
நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தொற்று நோய் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி 50 க்கும் குறைவான பிரமுகர்கள் மற்றும் விருந்தினர்கள் முக கவசங்களை அணிந்து சமூக இடைவெளியைப் பேணிகலந்து கொண்டனர்.
பதவியேற்க வந்த மேரி சைமனுக்கு ஆளுநர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. வீதிகளில் மக்கள் திரண்டு கைகளைத் தட்டி, ஆரவாரம் செய்து அவரை வரவேற்றனர்.
உலகில் உள்ள வேறெந்த நாடுகளையும் விட கனடா பன்முக கலாசாரத்துக்குப் பெயர்பெற்றது. இந்த நிலையில் எங்களுக்கு தற்போது மேரி சைமன் போன்றவர்கள் தேவை என பதவியேற்பு விழாவில் கருத்து வெளியிட்ட கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு சிறந்த எதிர்காலத்தை நோக்கி கனடா முன்னேற மேரி சைமன் தனது தனித்துவமான அனுபவத்தையும் திறமையையும் பயன்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பதாக ட்ரூடோ கூறினார்.
நெருக்கடியான இந்தத் தருத்தில் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். அத்துடன் காலநிலை நெருக்கடியை எதிர்த்துப் போராடுவது, நல்லிணக்கத்தின் பாதையில் முன்னேறுவது போன்ற செயற்றிட்டங்களில் உங்கள் காத்திரமாக பங்களிப்பு தேவை எனவும் ட்ரூடோ குறிப்பிட்டார்.