Reading Time: < 1 minute

போலி ஆவணங்களை உருவாக்கிக் காண்பித்து கனடாவாழ் புலம்பெயர் தமிழரை ஏமாற்றிய யாழ்ப்பாண மருத்துவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மருத்துவர் என அறிமுகப்படுத்தி கனடாவில் உள்ள ஒருவரிடம் ஒரு கோடியே 42 லட்சம் ரூபா மோசடி செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

புலம்பெயர் தமிழர்களிடம் மோசடி
யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த , 29 வயதுடைய சந்தேக நபர் தான் ஒரு மருத்துவர் என்பதற்குரிய போலி ஆவணங்களையும், அடையாள அட்டையையும் உருவாக்கியுள்ளார்.

கனடாவில் உள்ள ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ள இவர், மருத்துவ மேற்படிப்புக்காக புலமைப்பரிசில் கிடைத்துள்ளது என்றும், அதனால் வெளிநாடு செல்லவுள்ளேன் என்றும் கதைவிட்டுள்ளார்.

அதோடு யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் காணி ஒன்று தனக்கு உள்ளது என்று தெரிவித்து அதற்குரிய ஆவணங்களையும் அனுப்பியுள்ளார். குறித்த காணியை ஒரு கோடியே 42 லட்சத்துக்கு விலைபேசிய நிலையில், போலி மருத்துவரின் பேச்சை நம்பிய கனடாவாழ் நபர், ஒரு கோடியே 42 லட்சம் ரூபாவை மருத்துவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதன் பின்னரே போலி மருத்துவர் அனுப்பிய ஆவணங்கள் போலியானவை என்பதை அறிந்துகொண்ட கனடா நபர் அதிச்சியடைந்து இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டிற்கமைய யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்தவின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணறோயன் தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய போலி மருத்துவர் கைது செய்யப்பட்டதுடன் , அதிசொகுசு கார் ஒன்றும், 15 பவுண் நகைகளும், 5 லட்சம் ரூபா பணமும், 5 கைபேசிகளும் சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.