Reading Time: < 1 minute

கணினி நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு ஒன்றின் காரணமாக, நேற்று உலகில் ஆயிரக்கணக்கான இணையதளங்களும் டிஜிட்டல் சேவைகளும் பாதிக்கப்பட்டன.

கனடாவிலும் பல நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. Akamai என்னும் cloud computing நிறுவனத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சினைதான் இந்த குளறுபடிகளுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

ஆனால், இது சைபர் தாக்குதல் அல்ல என Akamai தெரிவித்துள்ளது. நேற்று மதியம் 1 மணியளவில் பிரச்சினையை சரி செய்துவிட்டதாக Akamai நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஆனால், விமான நிறுவனங்கள், வங்கிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான நிறுவனங்களில் இணையதளங்கள் மற்றும் ஆப்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதிலுமுள்ள இணைய போக்குவரத்தைக் கண்காணிக்கும் அமைப்பான Pingdom, ஒரு கட்டத்தில் 34,000 இணையதளங்கள் செயல்படாமல் இருந்ததாகவும், மதியம் 1.00 மணிக்குப் பின்பும் 18,000 தளங்கள் செயல்படவில்லை என்றும், அவற்றில் 200 கனடாவில் உள்ளவை என்றும் தெரிவித்துள்ளது.

சுமார் ஒரு மாதம் முன்புதான் Fastly என்னும் இணையதள சேவை நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆயிரக்கணக்கான இணையதளங்கள் பாதிக்கப்பட்டு சுமார் 2 பில்லியன் டொலர்கள் வரை இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.