கனடாவில் கோவிட் 19 தடுப்பூசி போடும் பணிகள் வேகப்படுத்தப்பட்டு, தொற்று நோயாளர் தொகை தொடர்ந்து குறைந்தால் பயணக் கட்டுப்பாடுகளை மேலும் இலகுவாக்குவது குறித்த புதிய அறிவிப்புக்களை கனேடியர்கள் விரைவில் எதிர்பார்க்கலாம் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்தார்.
கனேடியர்கள், கனேடிய நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சில வெளிநாட்டினருக்கான பெரும்பாலான பயணக் கட்டுப்பாடுகளை கனடா நீக்குகிறது.
ஜூலை 5 -ஆம் திகதி 11:59 மணிக்குப் பின்னர் தளர்த்தப்பட்ட பயணக் கட்டுப்பாட்டு விதிகள் நடைமுறைக்கு வரும் என கனடா சுகாதார அமைச்சர் பாட்டி ஹஜ்து தெரிவித்த ஒரு நாளைக்குப் பின்னர் பிரதமர் ட்ரூடோவிடம் இருந்து கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கான சாதகமான சமிக்ஞை வந்துள்ளது.
ஜூலை 5 -ஆம் திகதி முதல் தளர்த்தப்படும் புதிய விதிகளின் கீழ் கனடாவுக்குள் நுழையக்கூடிய கனடியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சில வெளிநாட்டினர் 14 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படமாட்டார்கள்.
அத்துடன், கனடா வந்தவுடன் ஹோட்டலில் தனிமைப்படுத்தும் நடைமுறை இருக்காது. இதனைவிட, எட்டாம் நாளில் பி.சி.ஆர்.பரிசோதனை முடிவை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாய நடைமுறையும் நீக்கப்படும்.
கனேடியர்கள் அனைவரதும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்போது கட்டுப்பாடுகள் தொடர்ந்து எளிதாக்கப்படும் என சுகாதார அமைச்சர் பாட்டி ஹஜ்து திங்கட்கிழமை கூறினார்.
இதேவேளை,கனேடியர்கள் அல்லாத அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணிகளுக்கு இந்த பயணக் கட்டுப்பாட்டு தளர்வு நடைமுறை பொருந்தாது எனவும் அவா் தெரிவித்தார். மேலும் முழுமையாக தடுப்பூசி போடாத கனேடியர்களும் தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவா் கூறினார்.
இவ்வாறான நிலையிலேயே கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தி நாட்டை படிப்படியாகத் திறப்பதற்கான திட்டங்களை அரசு ஆராய்ந்து வருகிறது என பிரதமர் ட்ரூடோ கூறினார். நிலைமைகளைப் பொறுத்து கட்டுப்பாடு தளர்வு அறிவித்தல்கள் அடுத்த வாரம் வெளியாகலாம் எனவும் நேற்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ட்ரூடோ தெரிவித்தார்.
இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட வேகமாகப் பரவும் ஆபத்தான டெல்டா பிறழ்வு வைரஸ் குறித்து அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் கூர்ந்து கவனித்து வருவதாகவும் அவா் தெரிவித்தார்.
கனடாவில் உள்ள சிக்கல்கள் எவை? உலகெங்கிலும் உள்ள நிலைமை என்ன? என்பதை நாம் தொடர்ந்து அவதானிப்போம். ஒவ்வொரு கட்டத்திலும் நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடனேயே முன்னேறுவோம். நாங்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்ப ஆர்வமாக உள்ளோம். ஆனால் கனேடியர்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொண்டே அதற்கான வழியில் நகர்வோம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.