கனடாவின் புதிய கடுமையான கோவிட்19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அடுத்து கனடாவுக்கு பயணம் செய்யும் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கோவிட்19 தொற்று நோய்க்கு முன்னரான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் தொற்று நோய்க்குப் பின்னராக பயணங்கள் 90 வீதம் குறைந்துள்ளன.
கனடாவின் எல்லை சேவைகள் அமைப்பின் தரவுகளின்படி ஜனவரி மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் சர்வதேச பயணிகளின் வருகை 106,000 ஆக குறைந்தது.
பெப்ரவரி முதல் இரண்டு வாரங்களில் இந்த எண்ணிக்கை 94,000 ஆகக் குறைவடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ஜனவரி முதலிரண்டு வாரங்களில் கனடாவுக்கு பயணம் செய்த சா்வதேச பயணிகளுடன் ஒப்பிடுகையில் 2021 ஆண்டு பெப்ரவரி முதலிரண்டு வாரங்களில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு குறைந்துள்ளது.
கனடாவுக்குப் பயணம் செய்வோர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு அண்மையில் எடுக்கப்பட்ட கோவிட்19 தொற்று இல்லை என உறுதிப்படுத்தும் பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என கட்டுப்பாடுகளை விதித்த பின்னர் கனடா வருவோரின் எண்ணி்க்கை சடுதியாகச் சரிவடைந்துள்ளது.
அத்துடன், பெப்ரவரி 22 முதல் கனடா வரும் அனைவரும் மூன்று நாட்கள் தமது சொந்தச் செலவில் ஹோட்டல்களில் தம்மைத் தனிமைப்படுத்த வேண்டும். அதன் பின்னர் நடத்தப்படும் சோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தபட்டாலே சுதந்திரமாக வெளியே நடமாட அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கனேடிய அரசு உத்தரவிட்டது.
இவை சர்வதேச பயணிகள் கனடாவுக்கு வருவதற்கு தடையாகவுள்ள காரணிகளாகும் என போக்குவரத்து விமான சேவை நிபுணரும் மெக்கில் பல்கலைக்கழக விரிவுரையாளருமான ஜான் கிராடெக் கூறினார்.
மூன்று நாட்கள் விடுதிகளில் தனிமைப்படுத்திக்கொள்ள 2,000 டொலர்களை செலவு செய்ய வேண்டிய நிலையும் கனடாவுக்கு சர்வதேச பயணிகள் வர அஞ்சுவதற்கு மற்றொரு முக்கிய காரணி எனவும் அவர் தெரிவித்தார்.