Reading Time: < 1 minute

ஓஷாவாவின் வடக்கே கிராமப்புற வீதி ஒன்றில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், வயதான பெண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளானதாக டூர்ஹம் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Purple Woods Conservation பகுதியில், Simcoe வீதியில் நேற்று காலை 8:30 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

தகவல் அறிந்து தாங்கள் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது, அங்கே வெள்ளை நிற பிக்கப் ரக வாகனம் ஒன்று முழுதாக எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும், அதற்குள் இருந்த ஆண் சாரதி பின்னர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், இரண்டாவது வாகனத்தினுள் வயதான பெண் ஒருவர் பாரதூரமான காயங்களுடன் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அந்த வாகனத்தினுள் இருந்து வயதான ஆண் ஒருவரும் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டதாகவும், அவசர மருத்துவப் பிரிவினர் அவருக்கு சம்பவ இடத்தில் வைத்தே உயிர்காப்பு சிகிச்சையை வழங்கிய போதிலும், அவரும் அங்கேயே உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வயதான பெண்ணும் ஒருவாறு வாகனத்தினுள் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டு, உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்கள் பெயர் விபரங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், விபத்து இடம்பெற்ற அந்தப் பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்த அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.