பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருப்பு நிற ஒப்பனை ஒளிப்படமொன்று வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து அவர் இதற்காக மனம்வருந்தி மன்னிப்பு கேட்டுள்ளார்.
18 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட இந்த ஒளிப்படம், பொதுத்தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் வெளியாகியிருப்பது ஜஸ்டின் ட்ரூடோவின், முன்னகர்வுக்கு தடையாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில், இதற்காக அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் எனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்கான வாய்ப்பை உருவாக்கவும், நிறவெறிக்கு எதிராகவும் பணிசெய்ய இருக்கிறேன். நான் எனது சிறுவயதில் பெரும் தவறு செய்துவிட்டேன்.
நான் அதைச் செய்திருக்கக் கூடாது என்று கருதுகிறேன். தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
கடந்த 2001ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றிய ஜஸ்டின் ட்ரூடோ, பாடசாலையில் நடைபெற்ற ஒரு அரேபிய நிகழ்ச்சி ஒன்றின் போது முகம், கழுத்து மற்றும் கைகளில் கருப்பு மை பூசி வெள்ளை நிற உடையில் காட்சியளிக்கும் ஒளிப்படமே இது.
இந்த ஒளிப்படம் தற்போது வைரலாக பரவிவருகின்றது. இந்த ஒளிப்படத்தின் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ, இனவெறியை வெளிப்படுத்தியதாக கூறி அவருக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
பன்முக கலாசாரம் கொண்ட மக்கள் வசிக்கும் கனடாவில், ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த புகைப்படம் நிறவெறியை தூண்டும் வகையில் இருப்பதாக பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.
எதிர்வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதில் இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.