Reading Time: 2 minutes

ஒரே நாளில் சகோதரனையும் இழந்து, தந்தையின் அரவணைப்பையும் இழந்த இந்திய வம்சாவளி பெண்ணொருவர் தனது சிறுவயதில் எடுத்த முடிவால் இன்று கனடாவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

1970 களில் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்த நீனா என்ற குறித்த பெண்ணின் குடும்பம், ரொறென்ரோவில் வாழ்ந்து வந்தது.

வெளியுலகுக்கு மகிழ்ச்சியாக வாழ்வது போல் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஓயாத பிரச்சினை நீடித்து வந்தது.

22 ஆண்டு கால போராட்ட வாழ்க்கையின் பிறகு, கையெழுத்திட்ட விவாகரத்து ஆவணங்களை கணவனிடம் கொடுத்து நீனாவின் தாய் விவாகரத்து பெற்றார்.

இருவரும் பிரிந்தாலும், மனைவியுடன் வாழ்ந்து வந்த பிள்ளைகளை பார்ப்பதற்காக, நீனாவின் தந்தை தினமும் அவர்களின் வீட்டுக்கு செல்வார். முன்னர் இல்லாத அன்புடன் பிள்ளைகளை கவனித்து வந்தார்.

அத்துடன், எப்போதும் பயமுறுத்தியே வைத்திருந்த மனைவியிடம் மீண்டும் தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் இரந்து கேட்பதை பார்த்து நீனாவுக்கும் அவரது தம்பி விஜய்யும் ஆச்சரியமடைந்தனர்.

இந்த நிலையில், ஒருநாள் அலுவலகம் சென்றிருந்த நீனாவின் தாய் சீக்கிரமாகவே வீடு திரும்பியிருந்த நிலையில், இருவருமாக கண் மருத்துவரைக் காண சென்றிருந்தனர்.

அவர்களுடன் செல்வதற்கு புறப்பட்ட நீனாவின் தம்பியை தந்தை தடுத்ததுடன், உடைகள் வாங்கித் தருவதாக கூறினார்.

இதனால், தாயும், மகளும் மாத்திரம் வௌியே புறப்பட்டுச் சென்றனர். மருத்துவரை காணச் சென்றவர்கள் வீடு திரும்பும்போது, தங்கள் வீடு தீப்பற்றி எரிந்த நிலையில் இருப்பதையும், தீயணைப்பு வீரர்களும், பொலிஸாரும் வீட்டின் முன் கூட்டமாக நிற்பதையும் கண்டு திடுக்கிட்டனர்.

நீனாவும் அவரது தாயும் பொலிஸாரால் வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்ட போது கண்ட காட்சி அவர்களின் மனங்களில் அழியாத கொடூரமான காட்சியாய் பதிந்து விட்டது. வீட்டுக்குள் நீனாவின் தம்பியும் அவரது தந்தையும் இறந்து கிடந்தனர்.

சகோதரனின் அருகே கிடந்த கத்தியையும் அவன் கழுத்திலிருந்த வெட்டுக் காயத்தையும் பார்த்தபின், அவனை தனது தந்தை கத்தியால் கழுத்தறுத்து கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்வதற்காக வீட்டைக் கொளுத்தியது தெரியவந்தது.

அந்த கொடூர செயல்களை, தங்கள் தந்தை நீண்ட காலமாக திட்டமிட்டு செய்ததை அறிந்ததுடன், தான் தன் தாயுடன் மருத்துவரைக் காண செல்லாமல் இருந்திருந்தால், தானும் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்தது.

அந்த அதிர்ச்சியிலிருந்து நீனாவால் நீண்டகாலமாக மீள முடியாமல் இருந்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் 2014 ஆம் ஆண்டில் கடுமையான நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்ட நீனாவின் தாயும் இறந்துவிட்டார்.

அதன்பின்னர் பல கடுமையான சவால்களை எதிர்கொண்டு மன அழுத்தத்தாலும், கொடூரமான நினைவுகளாலும் போராட்ட வாழ்க்கை மேற்கொண்டு வந்த நீனா பின்னர் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பினார்.

20 வருடங்களாக சுமந்து வந்த கோபமும், வெறுப்பும் மாறி, ஒருவேளை தனது தந்தைக்கு ஏதேனும் பிரச்சினை இருந்திருக்கலாமோ, மன அழுத்தத்தால் பதிக்கப்பட்டிருந்திருப்பாரோ என்ற ரீதியில் யோசிக்க ஆரம்பித்தார் நீனா.

அந்த வகையில் தனது சிந்தனையை திருப்பிய அவரது மனம் இலகுவானது போல் இருந்தது. ஒரு கட்டத்தில் அவரது மனப் போராட்டங்கள் காணாமல் போயிருந்தன.

இன்று தன்னைப்போல் போராடுபவர்களுக்கு உதவும் அளவுக்கு முன்னேறி விட்டார் நீனா. பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுரைகளும், ஆலோசனைகளையும் வழங்கிவருகிறார்.