ஒமிக்ரோன் தொற்று பரவல் குறித்த அச்சம் காரணமாக கனடா – ஒன்ராறியோ மாகாணத்தில் பல்லாயிரக் கணக்கான பொதுச் சேவை அலுவலர்கள் அலுவலகத்துக்குத் திரும்பும் திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஒன்ராறியோ பொதுச் சேவை துறையினர் மற்றும் ரொரான்டோ நகர பொதுச் சேவை பணியாளர்கள் பல ஆயிரக்கணக்கானோர் தொற்று நோய் நெருக்கடியை அடுத்து தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்றக் கோட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தொற்று நோயில் சரிவு ஏற்பட்டதை அடுத்து அவர்களை இந்தப் புத்தாண்டு முதல் அலுவலகத்துக்கு அழைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே தற்போது ஒமிக்ரோன் புதிய உரு திரிபு கவலைகளுக்கு மத்தியில் இந்தத் திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் ஆரம்பத்தில் தங்கள் அலுவலகத்திற்கு படிப்படியாகத் திரும்பத் தொடங்கிய சுமார் 30,000 ஒன்ராறியோ பொதுச் சேவை பணியாளர்கள் இந்த வார இறுதி முதல் மீண்டும் முழுநேரமாக வீட்டிலிருந்து பணிபுரியத் தொடங்கவுள்ளனர்.
ஒன்ராறியோ தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் கீரன் மூரின் புதிய ஆலோசனையை அடுத்து ஜனவரி 4 முதல் ஊழியர்கள் பகுதி நேரமாக அலுவலகத்திற்குத் திரும்புவதற்கான அதன் திட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக ரொரன்டோ நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த முடிவு ஏறத்தாழ நகரின் ஒட்டுமொத்த பணியாளர்களில் 25 வீதமானோர் மத்தியில் தாக்கம் செலுத்தவுள்ளது.
தொற்றுநோயிலிருந்து ரொரன்டோவை மீட்டெடுப்பதற்கும், பொது சுகாதார ஆலோசனைகளை தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கும் நான் எப்போதும் உறுதியுடன் இருக்கிறேன் என ரொரன்டோ நகர முதல்வர் ஜோன் டோரி தெரிவித்துள்ளார்.