கனடாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் தடுப்பூசிகளை முழுமையாக கனடாவுக்கு வழங்குவதில் முழுக் கவனம் செலுத்தி வருவதாக பைசர் நிறுவனத்தின் கனடாவுக்கான தலைவர் கோல் பின்னோ தெரிவித்துள்ளார்.
நாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளோம். பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கூறுவதைப் போன்று மார்ச் மாத இறுதிக்குள் நான்கு மில்லியன் தடுப்பூசிகளை கனடாவுக்கு வழங்கும் உறுதிப்பாட்டை நாங்கள் கொண்டுள்ளோம் எனவும் கோல் பின்னோ கூறினார்.
கனடாவுக்கான தடுப்பூசி விநியோகத்தில் ஆரம்பத்தில் இடையூறுகள் ஏற்பட்டன. எனினும் அடுத்துவரும் மாதங்களில் அதிகளவு தடுப்பூசிகளை கனடா பெற்றுக்கொள்ளும் என கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்தார்.
திட்டமிட்டதை விட ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் 2.8 மில்லியன் கூடுதல் தடுப்பூசிகளை வழங்க புதிய அட்டவணையின் பிரகாரம் பைசர் ஒப்புக்கொண்டுள்ளது.
அத்துடன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் கனடா எதிர்பார்த்ததை விட 6.2 மில்லியன் பைசர் தடுப்பூசிகளைக் கூடுதலாகப் பெறும்.
இதனைவிட, கூடுதலாக நான்கு மில்லியன் மொடர்னா தடுப்பூசிகளும் இந்த ஆண்டு கோடை காலத்துக்கிடையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் மாதத்திற்குள் கனடா 40 மில்லியன் பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது அனைத்து கனேடியர்களுக்கும் செப்டெம்பர் மாதத்துக்குள் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் இலக்கை நிறைவேற்ற உதவும் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில் ஒப்பந்தத்தின் பிரகாரம் கனடா மொத்தம் 76 மில்லியன் வரை பைசர் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம் எனக் கருதுவதாக பைசர் நிறுவனத்தின் கனடாவுக்கான தலைவர் கோல் பின்னோ கூறியுள்ளார்.
தேவைக்கேற்ப மேலதிக தடுப்பூசிகளை வழங்குவது குறித்து பேச நாங்கள் தயாராகவே இருக்கிறோம் எனவும் அவா் குறிப்பிட்டார்.
இதேவேளை, தடுப்பூசி நிறுவனங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களில் பிராகாரம் கனடாவுக்கு வரவேண்டிய தடுப்பூசிகளைப் முழுமையாகப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக கனடா கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் கடந்த வாரம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.