கொவிட் தொற்று நோய் ஆபத்து காரணமாக அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு குடிமக்களை வலியுறுத்தும் உத்தியோகபூா்வ பயண எச்சரிக்கையை ஒன்றைரை வருடங்களுக்குப் பின்னர் கனடா இரத்து செய்துள்ளது.
கொவிட் தொற்று நோக்கு எதிரான தடுப்பூசி போடும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் கனடா தலைமை மருத்துவ அதிகாரி தெரசா டாம் பயண எச்சரிக்கையை தளர்த்தும் அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை அடுத்து கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் முதல் வெளிநாடுகளுக்கான பயண எச்சரிக்கையை கனடா வெளியிட்டது.
இந்நிலையில் ஒன்றரை வருடத்துக்கு மேல் நீடித்த வெளிநாடுகளுக்கான பயண எச்சரிக்கை நீக்ப்பட்டுள்ளபோதும் நாட்டுக்கு வெளியேயான கடல் வழியான கப்பல் பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தபட்டுள்ளது.
கட்டுப்பாடுகளை தள்ர்த்தும் அறிவிப்பு தொற்று நோயின் கடுமையான விளைவுகளைத் தடுப்பதில் தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதை உறுதி செய்கிறது என நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கனடா தலைமை மருத்துவ அதிகாரி தெரசா டாம் கூறினார். உத்தியோகபூர்வ தரவுகளின்படி 82% கனேடியர்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் சமீபத்திய கண்காணிப்பு தரவுகள் தேசிய அளவில் தொற்று நோய் பரவல் குறைந்து வருவதைக் காட்டுவதாக டாம் கூறினார்.
இதேவேளை, சில நாடுகளுல் கொரோனா இன்னமும் தீவிரமாகப் பரவி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், இது அனைத்து நாடுகளுக்கும் சுதந்திரமாகச் செல்வதற்கான நேரம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.