ஒன்ராறியோ – ஹாமில்டனில் உள்ள சென். ஜோசப் வில்லா முதியோர் நீண்ட கால பராமரிப்பு மையத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவியுள்ளது. இல்லத்தில் வசிக்கும் 4 பேர் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இல்லத்தில் தொற்று நோய் பரவியுள்ளமையை சென். ஜோசப் வில்லா நிர்வாகம் நேற்று மாலை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் உறுதி செய்துள்ளது.
புதிய தொற்று பரவல் நீண்டகால பராமரிப்பு மைய குடியிருப்பு வெளியில் இருந்து பரவியதாக நம்பப்படுகிறது. தற்போது தொற்று உறுதி செய்யப்பட்ட 4 முதியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன், இவர்களுடனான தொடர்புகளைக் கண்டறியும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சென். ஜோசப் வில்லா முதியோர் குடியிருப்பு மையத்தில் உள்ள முதியவர்களில் 93 வீதமானவர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர். அத்துடன், இல்லத்தில் பணியாற்றும் ஊழியர்களிர் 72 வீதமானவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த இல்லத்தில் உள்ள அனைவருக்கும் 100 வீதம் முழுமையாகத் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென். ஜோசப் வில்லா இல்ல நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதிய தொற்று பரவல் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த குடியிருப்பு மையத்தில் வசிக்கும் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், இல்லத்துக்கு வரும் பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒன்ராறியோ முழுவதும் உள்ள 5 நீண்டகால பராமரிப்பு மையங்களில் தற்போது தொற்று நோய் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.