ஒன்ராறியோ மாகாண அரசு கோவிட்19 தொற்று நோயை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. அத்துடன், நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களைப் பாதுகாக்க விரிவான திட்டங்களை எதனையும் கொண்டிருக்கவில்லை என சுயாதீன ஆணைக்குழு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான புறக்கணிப்புக்களால் நீண்டகால பராமரிப்பு மையங்களில் வசிப்போர் மற்றும் பணியாளர்கள் எளிதாக தொற்று நோயால் பாதிக்கப்படக்கூடிய சூழல் அங்கு உருவானதாகவும் சுயாதீன ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவில் தொற்று நோயின் முதலாவது, இரண்டாவது அலைகளின்போது ஏராளமான முதியவா்கள் மற்றும் பணியாளர்கள் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டனர். பராமரிப்பு மையங்களில் அதிக உயிரிழப்புக்களும் பதிவாயின. அத்துடன், சில மையங்களில் முதியவர்கள் பராமரிப்பின்றிக் கைவிடப்பட்டனர்.
இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க சுயாதீன ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த ஆணைக்குழு தனது 322 பக்க அறிக்கையை வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்டது. அதிலேயே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தொற்று நோயைக் சமாளிக்க ஏற்ற வகையில் நீண்ட கால முதியோர் பராமரிப்பு மையங்கள் தயார் செய்யப்படாத அதேவேளை, தொற்று நோய் நெருக்கடி அங்கு தீவிரமான பின்னர் கூட அதனைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் காரணமாகவே அங்கு நிலைமை மேசமடைந்தது எனவும் சுயாதீன ஆணைக்குழு கண்டறிந்துள்ளது.
முடிவுகள் மிகவும் தாமதமாக எடுக்கப்பட்டன. நீண்ட கால முதியோர் பராமரிப்பு மையங்களில் வசிப்போரையும் அவற்றில் பணியாற்றும் ஊழியர்களையும் பாதுகாக்க அரசாங்கத்தின் அவசர கால நடவடிக்கைகள் போதுமானதாக இருக்கவில்லை எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொற்றுநோய் நெருக்கடியால் நீண்டகால பராமரிப்பு மையங்களின் குடியிருப்பாளர்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டனர். பல முதியவர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர்.
கோவிட்-19 தொற்றுநோயால் மாகாணத்தில் நீண்டகால பராமரிப்பு இல்லங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், அங்கு பராமரிக்கப்பட்ட 3,700 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். அவற்றில் 1,937 மரணங்கள் தொற்று நோயின் முதல் அலையின் போது பதிவாயின எனவும் சுயாதீன ஆணைக்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒன்ராறியோ மாகாணத்தில் கோவிட்-19 தொற்று நோய்க்கு முன்னரான நீண்டகால பராமரிப்பு நிலையங்களின் நிலை, தொற்றுநோய் நெருக்கடியின் போதான குறைபாடுகள், நீண்டகால பராமரிப்பு மையங்களில் ஏற்பட்ட பேரழிவுகள் ஆகியவை குறித்து விபரித்துள்ள இந்த அறிக்கை, பராமரிப்பு மையங்களில் பேண வேண்டிய நடைமுறைகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
இதேவேளை, ஒன்ராறியோ மாகாணத்தின் தொற்றுநோய் நெருக்கடி மீட்புத் திட்டம் 2014 முதல் புதுப்பிக்கப்படவில்லை எனவும் ஆணையம் கண்டறிந்ததுள்ளது.
ஒன்ராறியோவின் கொள்கை வகுப்பாளர்களும் தலைவர்களும் போதுமான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர் எனவும் அறிக்கை கடுமையாகச் சாடியுள்ளது.
2003 ஆம் ஆண்டில் சார்ஸ் (SARS) வைரஸ் தொற்று நோய் பாதிப்பை எதிர்கொண்ட பின்னர் தொற்று நோய்களை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது எனவும் சுயாதீன ஆணைக்குழு கண்டறிந்ததுள்ளது.
தொற்று நோயின் முதல் அலையின்போது மாகாணத்தில் உள்ள நீண்ட கால முதியோர் பராமரிப்பு மையங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பின்னர் கூட இரண்டாவது அலையில்போது இந்த மையங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
போதிய ஊழியர்கள், இன்மை, ஊழியர்களுக்கு உரிய பயிற்சியின்மை மற்றும் புதுப்பிக்கப்படாத பராமைரிப்பு மைய உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவை அதிக பாதிப்புக்களுக்குக் காரணிகளாக அமைந்திருந்தன என்பது விசாரணைகளில் தெளிவாகியுள்ளது எனவும் அறிக்கை குறிப்பிடுகின்றது.
ஒன்ராறியோ மாகாண அரசு முதியவர்களைக் கவனித்துக்கொள்வதற்கும் எதிர்கால தொற்றுநோய்க்குத் தயாராவதற்கும் நீண்டகால நோக்கில் திட்டங்களை வகுக்க வேண்டும். முதியோர் பராமரப்பு திட்டங்களை விரைவாக தயார் செய்து செயற்படுத்த வேண்டும் எனவும் சுயாதீன விசாரணை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. இது குறித்த 85 பரிந்துரைகளையும் சுயாதீன ஆணைக்குழு முன்வைத்துள்ளது.