ஒன்ராறியோவில் கொரோனா தொற்று நோய் முன்னொருபோதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளதால் மாகாணம் முழுவதும் உள்ள பாடசாலைகளின் நேரடிக் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெஸ்ஸுடன் இணைந்து குயின்ஸ் பார்க்கில் நேற்று நடத்திய அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து மாகாண முதல்வர் டக் போர்ட் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஏப்ரல் மாத விடுமுறையைத் தொடர்ந்து பாடசாலைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை இணைய வழியில் தொடர்ந்து நடத்த தீா்மானித்துள்ளோம். தொற்று நோயாளர் தொகை, மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவு தொற்று நோயாளர் தொகை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பாடசாலைகளைத் திறப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் எனவும் டக் போர்ட் தெரிவித்தார்.
மீண்டும் கூடிய விரைவில் நேரடிக் கல்விச் செயற்பாடுகளுக்காக பாடசாலைகளைத் திறக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். தொற்று நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஒன்ராறியோ முதல்வர் கூறினார்.
இதேவேளை, தனியார் பாடசாலைகளும் ஏப்ரல் 15 -க்கு முன்னதாக இணைய வழி கற்பித்தல் செயற்பாடுகளுக்கு நகருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும் பாடசாலை செல்லாத குழந்தைகளுக்கான பராமரிப்பு மையங்கள் திறந்திருக்கும். தகுதிவாய்ந்த சுகாதார பராமரிப்பு பணியாளர்கள் மற்றும் முன்னணி சுகாதார தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான இலவச அவசர குழந்தை பராமரிப்பு மையங்களும் திறந்திருக்கும்.
இணைய வழி கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத விசேட தேவை கொண்ட மாணவர்களுக்கு நேரடிக் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை பிராந்திய ரீதியான கல்வித் துறை சார்ந்தோர் முன்னெடுப்பார்கள் எனவும் ஒன்ராறியோ அரசு தெரிவித்துள்ளது.
தொற்று நோய் மிக வேகமாகப் பரவும் ரொரண்டோ, பீல் மற்றும் குயெல்ப் பிராந்தியங்களில் உள்ள பாடசாலைகளை மூடுமாறு கடந்த வாரமே அந்தந்தப் பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஈஸ்ரர் வார இறுதி விடுமுறை நாட்களில் அதிகளவில் மக்கள் ஒன்றுகூடியதும் தற்போது தொற்று நோய் தீவிரமாக அதிகரிப்பதற்கு ஒரு காரணம் என ஒன்ராறியோ தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் டேவிட் வில்லியம்ஸ் தெரிவித்தார்.
இவ்வாறான நேரத்தில் சமூக முடக்கல் நடவடிக்கை அவசியமானதும் புத்திசாலித்தனமானதுமாகும் என அவா் கூறினார்.
இதேவேளை, ஒன்ராறியோ மாகாண பாடசாலை மூடல் அறிவிப்பு பெற்றோருக்கும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என மாகாண என்.டி.பி. கட்சித் தலைவர் ஆண்ட்ரியா ஹார்வத் நேற்று திங்கட்கிழமை கூறினார்.
முதல்வர் டக் போர்ட் கண்களை அகலமாக திறந்து கொண்டே பாடசாலைகளை மூட வேண்டிய இவ்வாறான மோசமான நிலைக்குள் எங்களைத் தள்ளிவிட்டுள்ளார். மாகாண அரசு குழப்பத்தில் உள்ளதை மக்கள் உணர்கிறார்கள்.
தொற்று நோயின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்பதை நாங்கள் அறிவோம். எனினும் இதன் மோசமான விளைவுகள் தவிர்த்திருக்கக் கூடியவையே எனவும் அவா் குறிப்பிட்டார்.
அரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளை புறக்கணித்ததே இந்த நிலைக்குக் காரணம் எனவும் என்.டி.பி. தலைவர் கூறினார்.
இதற்கிடையில், நிலைமையைக் மோசமாகக் கையாண்டதற்காக மாகாண கல்வி அமைச்சரை நீக்குமாறு லிபரல் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
நேற்று முன்தினம் கூட பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் பாடசாலைகள் அனைத்தும் திறந்திருக்கும் என கல்வி அமைச்சர் தெரிவித்தார். ஆனால் மறுநாளே பாடசாலைகளை மூடும் அறிவிப்பு வெளியாகியுள்ளது என ஒன்ராறியோ லிபரல் கட்சித் தலைவர் ஸ்டீபன் டெல் டுகா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஒன்ராறியோவில் உள்ள 4,828 பொதுப் பாடசாலைகளில் 1,302 இல் தற்போது கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.