கொவிட் கட்டுப்பாடு உள்ளிட்ட பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சரக்கு வாகன சாரதிகளின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் கனடா – ஒன்ராறியோ மாகாணத் தில் அவசரகால நிலை நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அவசரகால நிலையை பிரகடனம் செய்யும் அறிவிப்பை மாகாண முதல்வர் டக் போர்ட் நேற்று வெளியிட்டார்.
இந்த அவசரகால நிலை உத்தரவு 72 மணி நேரத்திற்குள் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும்.
ஒட்டாவா நகர மையம், பாராளுமன்ற வளாகம் மற்றும் வின்ட்சர்ஸ் அம்பாசிடர் பாலத்தின் சில பகுதிகள் மூடப்பட்ட அதே நேரத்தில் அவசர கால நிலை அறிவிப்பில் டக் போர்ட் கையெழுத்திட்டார்.
இதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர் டக் போர்ட், முக்கியமான உட்கட்டமைப்பு வசதிகள், பொருட்கள் விநியோகம் மற்றும் மக்கள் சேவைகளுக்கான இயக்கத்தைத் தடை செய்வது சட்டவிரோதமானது மற்றும் தண்டனைக்குரியது என்பதை தெளிவாக்கும் உத்தரவுகளை அவசரமாக இயற்றுவேன் எனவும் கூறினார்.
சர்வதேச எல்லைகள், தொடர் நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், பாலங்கள் மற்றும் ரயில்வே ஆகியவற்றைப் பாதுகாக்கும் ஏற்பாடுகளும் இதில் அடங்கும்.
மருத்துவ சேவைகள், பொதுப் போக்குவரத்து, நகராட்சி மற்றும் மாகாண சாலைகள் மற்றும் பாதசாரி நடைபாதைகளை முற்றுகைகளில் இருந்து பாதுகாக்கும் நோக்குடன் உத்தரவுகளை அமுல் செய்யவுள்ளதாகவும் போர்ட் குறிப்பிட்டார்.
இந்த உத்தரவுகளை மீறுவோருக்கு அதிகபட்சமாக 100,000 கனேடிய டொலர் அபராதம் விதிக்கப்படலாம். அத்துடன், ஒரு வருடம் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் எனவும் மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்தார்.