ஒன்ராறியோவின் பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு எதிராக 9,000 மக்கள் ஆதரவு தெரிவித்து மனு அளித்துள்ளனர்.
எதிர்வரும் கவுன்சில் கூட்டத்தில் மக்களின் முடிவுக்கு மதிப்பளிக்கும் வகையில், வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கவும் விற்பனைக்கு எதிராகவும் முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிராம்டன் நகரவாசி ஒருவர் முன்னெடுத்த இந்த நடவடிக்கையானது தற்போது 9,000 மக்களின் ஆதரவை பெற்றுள்ளது. பிராம்டனில் வாணவேடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றே நகர மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நள்ளிரவு கடந்தும் வாணவேடிக்கை முன்னெடுப்பதும், அதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதும் மக்களை அவதியில் தள்ள, இறுதியில் புகார் மனு திரட்ட முடிவு செய்துள்ளனர். மொத்தம் 10,000 புகார் மனுக்களை திரட்டவே பிராம்டன்வாசிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே பிரம்டன் கவுன்சில் வாணவேடிக்கைகளுக்கு தடைவிதிக்கும் முடிவை அறிவித்துள்ளது. வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதும் விற்பனை செய்வதும் இனி சட்டவிரோதமாகும்.
தற்போது, ஆண்டுக்கு நான்குமுறை மட்டுமே வாணவேடிக்கை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் தனிப்பட்ட முறையில் தீபாவலி, விக்டோரியா தினம், கனடா தினம் மற்றும் புத்தாண்டு பிறப்பு ஆகிய தினங்களில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை முன்னெடுக்கலாம்.
ஆனால் இதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் காணப்பட்டால் அது சட்டவிரோதம் எனவும் கூறியுள்ளனர். விதிகளை மீறுவோருக்கு 350 முதல் 500 டொலர் அபராதம் விதிக்கப்படும் எனவும்,
வாணவேடிக்கை விற்பனைக்கு 350 முதல் 1,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும். மட்டுமின்றி, இரவு 11 மணி வரையில் மட்டுமே வாணவேடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.