ஒன்ராறியோவின் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரச் சட்டத்தை சவால் செய்து பல சிங்கள-கனடிய குழுக்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரச் சட்டமூலம் 104 -ஐ இதன்மூலம் அரசியலமைப்பின் பிரகாரம் ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் ஏற்று உறுதி செய்துள்ளது.
தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரச் சட்டமூலத்தின் நோக்கம் முற்றிலும் “அறிவூட்டல் அல்லது தெளிவுபடுத்தல்” என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
ஒன்ராறியோ சட்டமன்ற தமிழ் உறுப்பினர் விஜய் தணிகாலம் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் என்ற தனிநபர் பிரேரணையை 2019ஆம் ஆண்டு சமர்பித்தார்.
இலங்கை தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை அங்கீகரிக்கும் தனிநபர் பிரேரணையான தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம் முன்மொழிவு (Bill 104) மூன்றாவது வாசிப்பு மே 06ஆம் திகதி ஒன்ராறியோ மாகாணச் சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலமாக்கல் மீதான மூன்றாம் வாசிப்பில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அதனை ஆதரித்து வாக்களித்து நிறைவேற்றினர்.
தொடர்ந்து மாகாண ஆளுநர் ஒப்புதலுக்காக இது அனுப்பப்பட்டது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை வாரம் ஆரம்பமான முதல்நாளான மே-12 ஆம் திகதி இந்த சட்டமூலத்துக்கு ஒப்புதல் அளித்து மாகாண ஆளுநர் கையெழுத்திட்டார்.
இதன்மூலம் மே-18 ஆம் திகதியுடன் முடிவடையும் 7 நாட்கள் ஒன்ராறியோவில் ஆண்டுதோரும் தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரமாக கடைப்பிடிப்பதற்கான சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைத்தது.
அத்துடன், தமிழினப் படுகொலை குற்றச்சாட்டை வெளிநாடொன்றின் மாகாணம் சட்டரீதியாக ஏற்று அங்கீகரித்த முதல் சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்தச் சட்டமூலம் தொடர்பில் புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் இலங்கை தமிழ் – சிங்கள மக்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவித்தது.
இந்தச் சட்டமூலத்தை எதிர்த்து பல சிங்கள-கனடிய குழுக்கள் ஒன்ராறியோ உயர் நீதிமன்றில் மனுதி தாக்கல் செய்தன.
இலங்கையில் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றதாக எந்தவொரு சர்வதேச சட்டத்தின் கீழும் அங்கீகரிக்கப்படவில்லை. இந்நிலையில் இனப்படுகொலை என்ற சொல்லாடலை ஏற்றுக்கொள்ள மாகாண அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை. இது ஒரு இனக்குழு மீது மற்றொரு இனக் குழுவிற்கு வெறுப்பை ஏற்படுத்தும் எனவும் சிங்கள-கனடிய குழுக்கள் வாதிட்டன.
இந்நிலையில் சிங்கள-கனடிய குழுக்களின் மனுவை நேற்று நிராகரித்த ஒன்ராறியோ உயர் நீதிமன்றம், 26 ஆண்டுகால உள்நாட்டுப் போர் இலங்கையை அழித்ததாகவும். எனினும் இனங்களுக்கு இடையிலான மோதல்கள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்றும் கூறியது.
“போரின் வரலாற்றை யார் எழுதுவது? என்பதில் ஒரு புதிய போர் உருவாகியுள்ளது” என்று நீதிபதி ஜாஸ்மின் அக்பரலி நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தீர்ப்பில் கூறினார்.
ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை புலம்பெயர் தமிழ்-கனடியர்கள் வரவேற்றுள்ளனர். இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான அட்டூழியங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிக்கத் தயங்கிறது.
பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு நீதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இனப்படுகொலை தொடர்பான அறிவூட்டலே நீதி கோருவதற்கான தற்போதுள்ள ஒரே வழி எனவும் புலம்பெயர் தமிழ்-கனடியர்கள் தெரிவித்துள்ளனர்.
போரில் கொல்லப்பட்ட எண்ணற்ற உயிர்களை நினைவு கூர்வது தமிழர்களைப் பொறுத்தவரை முக்கியமானது. ஒன்ராறியோ நீதிமன்ற தீா்ப்பைத் தொடர்ந்து மாகாணம் முழுவதும் உள்ள தமிழர்கள் அந்த உரிமையை தடையின்றி இனி அனுபவிக்க முடியும் என இந்த வழக்கில் முன்னின்று செயற்பட்ட தமிழ் உரிமைக் குழுக்கள் ஒன்றின் உறுப்பினர் கற்பனா நாகேந்திரா (Katpana Nagendra) தெரிவித்துள்ளார்.