ஒன்ராறியோ இளையோர் ஹொக்கி சங்கத்தில் இருந்து நிதி மோசடி வழக்கில் பெண் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோ இளையோர் ஹொக்கி சங்கத்தில் இருந்து ஜார்ஜினா நகரை சேர்ந்த பெண் சுமார் 2.4 மில்லியன் டொலர் மோசடி செய்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கிலேயே குறித்த பெண்மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நவம்பர் 2018ல் நிதி மோசடி தொடர்பில் யார்க் பிராந்திய காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் விசாரணைத் தொடங்கியது. ஜார்ஜினா பகுதியை சேர்ந்த Jennifer Guertin என்பவர் குறித்த ஹொக்கி சங்கத்தில் நிதி இயக்குனராக பொறுப்பு வகித்த காலத்திலேயே இந்த மோசடி நடந்துள்ளதை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதனையடுத்து 2019 ஜூன் மாதம் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. 2021 செப்டம்பர் மாதம் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு 48 மாத சிறைவாசமும் ஹொக்கி சங்கத்திற்கு 100,000 டொலர் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.