ஒன்டாரியோ மாகாணத்தில் அமுலில் கோவிட் கட்டுப்பாடுகளை 3 படிமுறைகளின் கீழ் தளர்த்தும் திட்டத்தை மாகாண அரசு அறிவித்துள்ளது.
மே 22 முதல் கோல்ப் விளையாட்டு மைதானங்கள் மற்றும் டென்னிஸ் அரங்குகள் உள்ளி்ட போன்ற வெளிப்புற பொழுதுபோக்கு மையங்களை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சமூகக் கூட்டங்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பொது நிகழ்வுகளுக்கான வெளிப்புற கட்டுப்பாடுகள் சனிக்கிழமை முதல் தளர்த்தப்படும். இவ்வாறான நிகழ்வுகளில் ஐந்து பேர் வரை கூட அனுமதிக்கப்படும்.
மீண்டும் திறக்கும் மூன்று படிமுறைத் திட்டங்களின் முதலாம் படிநிலை ஜூன் 14 தொடங்கும் என்று அரசாங்கம் கூறியது. வீட்டிலேயே தங்குவதற்கான உத்தரவு ஜூன் 2 ஆம் திகதியுடன் காலாவதியாகும், ஆனால் மாகாணம் முதலாம் படிக்குள் நுழையும் வரை அனைத்து அத்தியாவசிய வணிக நிறுவனங்களும் மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் படி
கட்டுப்பாடுகளின் தளா்வு முதல் படி அமுலுக்கு வருவதற்கு முன்னர் ஒன்ராறியோ 60 வீதமான 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு குறைந்தது ஒரு தடுப்பூசியையேனும் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் கருத்துப்படி, ஒன்ராறியோவில் இன்றுவரை 58 வீதமான 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஜன்14-க்கு முன்னர் 60 வீத பெரியவர்களுக்கு தடுப்பூசி போடும் இலக்கை அடைய முடியும் என சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் நம்பிக்கை தெரிவித்தார்.
முதல் படிநிலை தளர்வின் கீழ் அத்தியாவசியமற்ற சில்லறை கடைகள் 15 சதவீத திறனுடன் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும். 10 பேர் வரை வெளிப்புற கூட்டங்களில் ஒன்றுகூட அனுமதிக்கப்படும். வெளிப்புற உணவகங்களில் ஒரே நேரத்தில் நான்கு பேர் அமர்ந்து உண்ண அனுமதிக்கப்படும்.
இரண்டாம் படி
இரண்டாம் படிநிலைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த முன்னர் 18 வயதுக்கு மேற்பட்ட 70 வீதமான ஒன்ராறியர்களுக்கு ஒற்றைத் தடுப்பூசியும் 20 வீதமானவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளையும் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் படிநிலை தளா்வின் கீழ் 25 பேர் வெளிப்புற கூட்டங்களுக்கு அனுமதிக்கப்படுவர். உள்ளரங்குகளில் ஐந்து பேர் வரை ஒன்று கூடி அனுமதி வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெளிப்புற விளையாட்டு மற்றும் லீக் போட்டிகள் இரண்டாம் படிநிலை தளா்வின் கீழ் அனுமதிக்கப்படும்.
அத்துடன் இரண்டாம் படிநிலை கட்டுப்பாடு தளர்வு அமுலுக்கு வரும்போது மதத் தலங்கள் 15 வீத திறன்வரம்பில் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படும்.
அத்தியாவசிய சில்லறை விற்பனையாளர்கள் 50 வீத திறனுடனும் அத்தியாவசியமற்ற வணிக நிறுவனங்கள் 25 வீத திறனுடனும் செயற்பட அனுமதிக்கப்படும்.
இரண்டாம் படி நிலை தளா்வின்போது பூங்காக்களும் மீண்டும் திறக்கப்படலாம். வெளிப்புற சினிமாக்கள், கலை நிகழ்ச்சிகள் ஆகியனவற்றையும் ஆரம்பிக்க அனுமதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் படி
மூன்றாம் படி
இறுதிக் கட்டமாக மூன்றாம் படிநிலை கட்டுப்பாட்டு தளர்வின்போது மாகாணம் பெரும்பாலும் இயல்பு நிலைக்கு திரும்பும்.
இந்த தளா்வு நிலைக்கு திரும்பும்போது ஒன்ராறியோவில் 70 முதல் 80 வீதம் பெரியவர்கள் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியையும் 25 விகிதத்தினர் இரு தடுப்பூசிகளையும் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம்படி நிலை தளர்வின் கீழ் உள்புற மற்றும் வெளிப்புற கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும். எனினும் இதன்போது அனுமதிக்கப்படவுள்ளவர்கள் தொடர்பான எண்ணிக்கையை அரசு அறிவிக்கவில்லை.