ஒன்ராறியோவில் கோவிட்19 தொற்று நோயாளர் தொகை தொடர்ந்து அதிகரிப்பதுடன், மருத்துவமனை சோ்க்கையும் உயர்ந்து வருவதால் மாகாணத்தில் அமுல் செய்யப்பட வேண்டிய புதிய கட்டுப்பாடுகள் குறித்து தனது அமைச்சரவை விரைவில் கூடி விவாதிக்கும் என முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
அத்துடன், புதிய ஈஸ்டர் கொத்தணிகளை உருவாக்க வேண்டாம் எனவும் அவா் ஒன்ராறியர்களை கேட்டுக்கொண்டார்.
ரொரண்டோவில் நேற்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவா், நிலைமை தொடர்ந்து கைமீறினால் மருத்துவமனைகளின் திறனைத் தக்கவைத்துக் கொள்ள மற்றொரு முடக்கல் நிலையை அறிவிக்கவும் தயங்கமாட்டேன் எனத் தெரிவித்தார்.
ஒன்ராறியோவில் தொற்று நோய் நெருக்கடி தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. அதி தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அதிகளவில் இள வயதினர் அனுமதிக்கப்பட்டு வருவது குறித்து நான் மிகவும் கவலை கொண்டுள்ளேன்.
இவ்வாறான நிலையில் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கு திட்டமிட வேண்டாம். எந்தவொரு நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். எங்கள் மக்களின் ஆரோக்கியத்துக்கு மேல் எதுவும் முக்கியமில்லை. அதனை உறுதி செய்ய முன்னரைப் போன்று மீண்டும் ஒருமுறை முடக்க நிலையை அறிவிக்க நான் தயங்க மாட்டேன் எனவும் போர்ட் தெரிவித்தார்.
ஒன்ராறியோவின் சமீபத்திய தரவுகளின்படி இப்போது குறைந்தபட்சம் 410 பேர் கொரோனா தொற்று நோய் தீவிரமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளனர். கடந்த ஒரு வாரமாக தினசரி தொற்று நோயாளர் தொகை சராசரியாக 2,000-க்கு மேல் பதிவாகி வருகிறது.
கடந்த டிசம்பரில் சமூக முடக்கல் அமுலில் இருந்தபோது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவர்களை விட தற்போது 21 வீதமானோர் அதிகளவில் உள்ளனர்.
புதிய தொற்று நோயாளர்களில் சுமார் 67 வீதத்தினர் கவலைக்குரிய புதிய பிறழ்வு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே தொற்று நோய் தொடர்ந்து தீவிரமடைவதற்கான முக்கிய காரணியாக உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.