ஒன்ராறியோ மாகாணத்தில் ஒமிக்ரோன் வைரஸ் பரவலைக் கட்டுபடுத்த கடுமையான, அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் ஜனவரியில் தொற்று நோய் தீவிரமடைந்து, மருத்துவமனைகள் அவற்றின் பராமரிப்புத் திறனை இழக்கும் ஆபத்து ஏற்படும் என புதிய மாதிரிக் கணிப்பீடு தெரிவிக்கின்றது.
ஒன்ராறியோவின் அறிவியல் ஆலோசனை வல்லுநர்கள் குழுவினர் நேற்று வியாழக்கிழமை புதிய மாதிரிக் கணிப்பீட்டை வெளியிட்டு மாகாணம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துக் குறித்து விளக்கமளித்தனர்.
இந்தக் கணிப்பீட்டின் பிரகாரம் ஒன்ராறியோவில் ஆதிக்கம் செலுத்தும் வைரஸ் திரிபாக ஒமிக்ரோன் இந்த வாரத்தில் மாறும் என அவா்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உடனடியாக ஒமிக்ரோன் பரவலைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஜனவரியில் மருத்துவமனைகள் கடும் அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும். அத்துடன், அவசர சிகிச்சைப் பிரிவுகளும் நிரம்பும் ஆபத்து உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, ஒமிக்ரோன் அலையைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகளை மட்டும் நம்பிருப்பது போதுமானதாக இல்லை எனவும் அவா்கள் கூட்டிக்காட்டியுள்ளனர்.
ஒன்ராறியர்கள் தங்கள் தொடர்புகளை 50 வீதம் குறைத்து, விரைவாக பூஸ்டர் உள்ளிட்ட தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். தினசரி 250,000 என்ற அளவுக்கு பூஸ்டர் நிா்வகிப்பு விரைவுபடுத்தப்பட வேண்டும்.
தரம்வாய்ந்த மூககவசங்களை சரியான முறையில் பயன்படுத்துவது, சமூக இடைவெளியைப் பேணுவது, வீடுகள் மற்றும் பணியிடங்களில் போதிய காற்றோட்டமாக சூழலை உறுதி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொற்று நோயைக் கட்டுப்படுத்த பங்களிக்கும் எனவும் புதிய மாதிரிக் கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லாவிட்டால் கிறிஸ்துமஸுக்கு முன் ஒரு நாளைக்கு 10,000 -க்கும் அதிகமான தொற்று நோயாளர்கள் பதிவாகலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரோன் திரிபுக்கு எதிராக தடுப்பூசிகள் குறைவான செயல்திறன் கொண்டவையாக உள்ளபோதும் பூஸ்டர்கள் பாதுகாப்பை கணிசமாக அதிகரிக்கும் என்று கணிப்பீட்டறிக்கை கூறுகிறது.
இதேவேளை, ஒன்ராறியோவில் நேற்று வியாழக்கிழமை 2,421 கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதுடன், 9 மரணங்களும் பதிவாகின.
இறுதியாக மிக அதிகளவாக 2,584 தொற்று நோயாளர்கள் கடந்த மே-15 அன்று ஒன்ராறியோவில் பதிவாகினர். இந்நிலையில் மாகாணம் மீண்டும் அவ்வாறான எண்களை நோக்கி நகர்ந்து வருகின்மை ஆபத்தை சுட்டிக்காட்டுவதாக மாகாண சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.