ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படும் நோயாளர் தொகை அதிகரித்துவரும் நிலையில் தீவிர சிசிச்சை பராமரிப்பு பயிற்சி பெற்ற தாதியர்களுக்குப் பற்றாக்குறை ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர்க்க ஏனைய மாகாணங்களில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவு பராமரிப்பு தாதியர்களை ஒன்ராறியோ மாகாணத்துக்கு அனுப்ப மாகாண மற்றும் மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரொராண்டோ – மைக்கேல் கரோன் மருத்துவமனை பணிப்பாளர் டாக்டர் மைக்கேல் வோர்னர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒன்ராறியோ தீவிர சிகிச்சை பிரிவுகளில் தற்போது 572 நோயாளிகள் உள்ளதாக நேற்று சனிக்கிழமை சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் டாக்டர் மைக்கேல் வோர்னர் குறிப்பிட்டார்.
வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் 77 கோவிட்19 தொற்று நோயாளர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாக அவா் கூறினார்.
இவ்வாறு தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளர் தொகை தொடர்ந்து அதிகரித்தால் மாகாணத்தின் நிலைமை துரதிர்ஷ்டவசமாக மிகவும் மோசமாகிவிடலாம் எனவும் அவா் எச்சரித்தார்.
தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளர் தொகை அதிகரித்துச் சென்றால் அவர்களைப் பராமரிக்க போதுமான பயிற்சி பெற்ற தாதியர்கள் எங்களிடம் இல்லை. எனவே, பிற மாகாணங்களில் இருந்து பயிற்சி பெற்ற தாதியர்களை ஒன்ராறியோவுக்கு அனுப்ப மத்திய, மாகாண அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரொராண்டோ – மைக்கேல் கரோன் மருத்துவமனை பணிப்பாளர் டாக்டர் மைக்கேல் வோர்னர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒன்ராறியோவில் அதிகரித்துவரும் தொற்று நோயாளர் தொகையைச் சமாளிக்க உதவும் வகையில் கடந்த வெள்ளிக்க்ழமை இரண்டு மேலதிக சுகாதார அவசர நிலைகளை மாாகண அரசாங்கம் அறிவித்தது.
ஒரு அவசர கால உத்தரவு மருத்துவமனைகளில் நோயாளர் தொகை அதிகமானால் நோயாளர் அனுமதியின்றியே அவா்களை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்ற அனுமதிக்கிறது.
மற்றொரு அவசர கால உத்தரவு மாகாணத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற, அல்லது இடை விலகிய மருத்துவ வல்லுநா்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களை மருத்துவமனைகள் தமது தேவைக்கு ஏற்ப சுயாதீனமாக மீண்டும் பணிக்கு அமர்த்த அனுமதி அளிக்கிறது.
கோவிட் தொற்று நோயின் மூன்றாவது அலையுடன் ஒன்ராறியோ மாகாணம் போராடி வரும் நிலையில் அங்குள்ள மருத்துவமனைகள் முன்னொருபோதும் இல்லாத வகையில் பராமரிப்புத் திறனில் கடும் அழுத்தங்களை எதிர்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் மருத்துவமனைகளை ஒன்றிணைத்து அனைத்து வளங்களையும் பகிர்ந்துகொள்ளும் வகையில் அரசாங்கம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஒன்றாறியோ சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையிலேயே பிற மாகாணங்களில் இருந்தும் தாதியர்களை ஒன்ராறியோவுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாகாண அரசுகள் ஒருங்கிணைந்து முன்னெடுக்க வேண்டும் என டாக்டர் மைக்கேல் வோர்னர் கோரிக்கை விடுத்துள்ளார்.