Reading Time: 2 minutes

ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை தொடர்ந்து குறைந்து வருகின்றபோதும் டெல்டா திரிவு வைரஸால் நான்காவது அலைக்கான சாத்தியங்கள் உள்ளதை நிராகரிக்க முடியாது என புதிய மதீப்பீட்டில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நான்காவது அலையைத் தவிர்ப்பதற்கு அனைவருக்கும் முழுமையான தடுப்பூசி போடப்படுவதை மாகாண அரசு உறுதிப்படுத்த வேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஒன்ராறியோவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் வெகுவாகக் குறைந்து வரும் நிலையில் தொற்று நோய் நெருக்கடியை தொடர்ந்து கட்டுப்படுத்துவதற்கான புதிய வழிகாட்டல்களை சுகாதார அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டனர்.

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். இதன்மூலம் நாங்கள் கோடை காலத்தை சிறப்பானதாக மாற்ற முடியும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறந்த அடைவை நாங்கள் பெறவேண்டுமானால் ஒன்ராறியோவில் அடுத்த 10 நாட்களுக்கு தொற்று நோய் தொடர்ந்து குறைய வேண்டும்.

கடந்த சில வாரங்களாக கிட்டத்தட்ட அனைத்து பொது சுகாதார பிரிவுகளிலும் நோய்த்தொற்றுகள் கடுமையாக குறைந்துள்ளன. மருத்துவமனை சேர்க்கை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிகளும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளன.

ஒன்ராறியோ தொடர்ந்து தொற்று நோயைக் கட்டுப்படுத்தினால் தீவிர சிகிச்சை பிரிவு நோயாளர் தொகை மேலும் குறையும். இதன்மூலம் சாதாரண மருத்துவமனை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கலாம் எனவும் புதிய மதிப்பீட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று நோயின் நான்காவது அலையை தவிர்ப்பதற்கு, ஒன்ராறியோ முடிந்தவரை அதிகாளவானவர்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி போட வேண்டும் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

மாகாணத்தின் தற்போது ஆதிக்கம் செலுத்தும் டெல்டா திரிபு வைரஸ் பி .1.1.7 அல்லது அல்பா திரபை விட 50 சதவீதம் அதிகமாக பரவக்கூடியது எனவும் அவா்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கோவிட் -19 தடுப்பூசியின் முதல் தடுப்பூசி டெல்டா திரிபில் இருந்து பாதுகாப்பு அளிப்பதில் குறைந்த செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இரண்டாவது தடுப்பூசியே மேலும் 50 சதவீத செயல்திறனை கொடுக்கிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் டெல்டா திரிபு அதிகளவில் பரவும் 7 பகுதிகளில் மே 9 அல்லது அதற்கு முன்னர் இரண்டாவது தடுப்பூசியைப் போடும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தவுள்ளதாக ஒன்ராறியோ மாகாண அரசு நேற்று வியாழக்கிழமை அறிவித்தது.

ஹால்டன், பீல், போர்குபைன், ரொரண்டோ, வாட்டர்லூ, வெலிங்டன்-டஃபெரின்-குயெல்ப் மற்றும் யோர்க் பொது சுகாதார பிரிவுகளுக்குள் உள்ள ஆபத்தான பகுதிகளைச் சோ்ந்த நபர்கள் ஜூன் 14 ஆம் திகதி காலை 8 மணி வரை மாகாண முன்பதிவு முறை மூலம் தங்கள் இரண்டாவது பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசிகளைப் பெறுவதற்கான முன்பதிவுகளை மேற்கொள்ள தகுதி பெறுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய முன்னேற்றம் தொடருமானால் கோடை காலத்தில் ஒன்ராறியோவில் தினசரி தொற்று நோயாளர் தொகை 500-க்கும் குறைவாக இருக்கும்.

எனினும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மந்தமாக அமைந்தால் ஆகஸ்ட் மாதத்திற்குள் தினசரி தொற்று நோயாளர் எண்ணிக்கை 1,000 வரை உயரக்கூடும்.

கட்டுப்பாட்டு நடவடிக்கை மிக மோசமாக அமைந்தால் ஆகஸ்ட் நடுப்பகுதியில் ஒரு நாளைக்கு 2,500 வரை தொற்று நோயாளர் தொகை பதிவாகலாம் எனவும் புதிய மதிப்பீட்டறிக்கை தெரிவிக்கிறது.

நேற்று வியாழக்கிழமை ஒன்ராறியோவில் 590 புதிய தொற்றுநோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். 11 கொரோனா மரணங்களும் பதிவாகின.

நேற்று வரையான தரவுகளின் பிரகாரம் மாகாணத்தில் மொத்தம் 10.6 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நேற்றுவரை 13 இலட்சத்து 99 ஆயிரத்து 776 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

ஒன்ராறியோவில் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் இதுவரை ஒரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாாதவர்கள் என மாகாண இணை சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் பார்பரா யாஃப் கூறினார்.